இறைவன் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி 'யாகவும், திருவண்ணாமலை 'மணிபூரக'மாகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும் ', காசி 'புருவமத்தி'யாகவும், சிதம்பரம் 'இருதயஸ்தான'மாகவும், சொல்லப்படும்.
பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத் ' தலம்.
பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.
இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
"சிற்றம்பலம்" நடராசப்பெருமான் திருநடனம்புரிந்தருளும் இடம் - 'தப்ரசபா ' எனப்படும் இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதற்பராந்தகசோழன் பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும் 'லெய்டன்' நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம் தெரிவிக்கின்றது.
"பொன்னம்பலம் (கனகசபை)" நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழாரும், தில்லைக்கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன்வேய்ந்தான் என்றும் கூறுகின்றது.
"பேரம்பலம்" இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலதில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஆவான்.
"நிருத்த சபை" ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.
"இராச சபை" இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு இம்மண்டபத்தில் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தன.
வியாக்ரபாதர் (புலிக்கால்முனிவர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும்; சித்+ அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானகாசம் என்றும்; பூலோக கயிலாயம், புண்டரீகபுரம் சிதாகாசத்தலம் எனவும் இதற்குப் பலபெயர்களுண்டு.
வைணவத்திலும் 'திருச்சித்திரக்கூடம்' என்று புகழ்ந்தோதப்படும் திருப் பதி.
சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.
மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி.
திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இப்பதியில் தான்.
உமாபதிசிவம் 'கொடிக்கவி' பாடிக் கொடியேற வைத்த அதிசய தலம்.
திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்செய்த மந்திரத்தலம்.
இராசராசன் வேண்டுதலின்பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைக்கொண்டு, திருமுறைகளை வெளிப்படுத்திய தெய்விகத் தலம்.
சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றச் செய்யப்பட்ட அருமையான தலம்.
நடராச சந்நிதிக்கான கொடிமரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.
சிற்றம்பலம் - சிற்சபை நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் 'சிதம்பர ரகசியம் ' உள்ளது.