கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம்) ஆலய தேவாரம்
கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம்) ஆலயம்1-68-733:
பொடிகொளுருவர் புலியினதளர் புரிநுல்திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்
இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே.
1-68-734:
புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே.
1-68-735:
மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல்
மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னுந்
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே.
1-68-736:
முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன்
தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார்
மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு
கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே.
1-68-737:
ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்குந்
தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக்
கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே.
1-68-738:
தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும்
மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே.
1-68-739:
தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால்
எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார்
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே.
1-68-740:
ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம்
பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகிக்
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே.
1-68-741:
விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்
பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள்
கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே.
1-68-742:
போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே.
3-68-3526:
வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகில் மூளுமிருள் கீளவிரி தாளகயி லாயமலையே.
3-68-3527:
புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண் ஒற்றைவிடையன்
செற்றதெயில் உற்றதுமை யற்றவர்கள் நற்றுணைவன் உற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு குற்றமில தெற்றெனவினாய்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி பெற்றகயி லாயமலையே.
3-68-3528:
சிங்கவரை மங்கையர்கள் தங்களன செங்கைநிறை கொங்குமலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்ககல வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர் தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை தங்குகயி லாயமலையே.
3-68-3529:
முடியசடை பிடியதொரு வடியமழு வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி நொடியமகிழ் அடிகளிடமாங்
கொடியகுர லுடையவிடை கடியதுடி யடியினொடு மிடியினதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியவத ரடிகொள்கயி லாயமலையே.
3-68-3530:
குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ விடங்கிளர் படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு விடங்கன திடந்தண்முகில்போய்த்
தடங்கடல் தொடர்ந்துட னுடங்குவ விடங்கொள மிடைந்தகுரலாற்
கடுங்கலின் முடங்களை நுடங்கர வொடுங்குகயி லாயமலையே.
3-68-3531:
ஏதமில பூதமொடு கோதைதுணை யாதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற வாதுபயில் நாதன்நகர்தான்
தாதுபொதி போதுவிட வு[துசிறை மீதுதுளி கூதல்நலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில் கோதுகயி லாயமலையே.
3-68-3532:
சென்றுபல வென்றுலவு புன்றலையர் துன்றலொடும் ஒன்றியுடனே
நின்றமரர் என்றுமிறை வன்றனடி சென்றுபணி கின்றநகர்தான்
துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன் நின்றகயி லாயமலையே.
3-68-3533:
மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை யொருக்குடன் அரக்கனுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்தவிரலாற்
கருத்தில வொருத்தனை யெருத்திற நெரித்தகயி லாயமலையே.
3-68-3534:
பரியதிரை பெரியபுனல் வரியபுலி யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு புரிவினவர் பிரிவில்நகர்தான்
பெரியஎரி யுருவமது தெரியவுரு பரிவுதரும் அருமையதனாற்
கரியவனும் அரியமறை புரியவனும் மருவுகயி லாயமலையே.
3-68-3535:
அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர சண்டவிருள் கண்டரிடமாங்
குண்டமண வண்டரவர் மண்டைகையில் உண்டுளறி மிண்டுசமயங்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி யாதகயி லாயமலையே.
3-68-3536:
அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை சந்தனமொ டுந்தியகிலுங்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகமெளிதே.
4-47-4614:
கனகமா வயிர முந்து
மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி
யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற ஈச
னுன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா ய[ன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
4-47-4615:
கதித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவன் எடுத்தி டலும்
அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவ னுன்றி யிட்ட
நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை ய[ன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
4-47-4616:
கறுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச
வானவர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலா லூன்ற
நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை ய[ன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
4-47-4617:
கடுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
எடுத்தலும் மங்கை அஞ்ச
இறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற
நோவது மலறி யிட்டான்
மடித்திறை ய[ன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
4-47-4618:
கன்றித்தன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா
லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாத
னுன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
4-47-4619:
களித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டலும்
நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவ னுன்றி யிட்ட
வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை ய[ன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
4-47-4620:
கருத்தனாய்க் கண்சி வந்து
கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த வாறே
ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன்
திருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
4-47-4621:
கடியவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை அஞ்ச
எடுத்தலும் மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரலா
லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வு[ன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
4-47-4622:
கரியத்தான் கண்சி வந்து
கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தான் எடுத்தி டலும்
ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம்
நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
4-47-4623:
கற்றனன் கயிலை தன்னைக்
காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த வாறே
சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம்
உணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.
6-55-6794:
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6795:
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6796:
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6797:
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6798:
ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6799:
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6800:
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6801:
இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான ஒருவா போற்றி
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6802:
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6803:
நெடிய விசும்போடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-55-6804:
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6805:
பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6806:
முன்பாகி நின்ற முதலே போற்றி
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6807:
மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைக ளறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6808:
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6809:
மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசேர் அனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6810:
ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி யுடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6811:
அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6812:
பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
ஆரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6813:
செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி
தேடி யுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-56-6814:
மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-57-6815:
பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாலை மத்த மணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-57-6816:
அதிரா வினைக ளறுப்பாய் போற்றி
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி
எதிரா உலக மமைப்பாய் போற்றி
என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-57-6817:
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாச வண்ண முடியாய் போற்றி
வெய்யாய் தணியா யணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-57-6818:
ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-57-6819:
முன்னியா நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
ஏழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-57-6820:
உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
ஏசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே அடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-57-6821:
எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-57-6822:
முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியா ரடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
6-57-6823:
போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநுறு பேராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
7-100-8241:
தானெனை முன்படைத் தானத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத்
தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
7-100-8242:
ஆனை உரித்த பகைஅடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட் டிஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தம ரர்வலஞ்
செய்தெனை ஏறவைக்க
ஆனை அருள்புரிந் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
7-100-8243:
மந்திரம் ஒன்றறி யேன்மனை
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்
தொண்டனெனை
அந்தர மால்விசும் பில்அழ
கானை அருள்புரிந்த
துந்தர மோநெஞ்ச மேநொடித்
தான்மலை உத்தமனே.
7-100-8244:
வாழ்வை உகந்தநெஞ் சேமட
வார்தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென் னைஅது
மாற்றி அமரரெல்லாஞ்
சூழ அருள்புரிந் துதொண்ட
னேன்பரம் அல்லதொரு
வேழம் அருள்புரிந் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
7-100-8245:
மண்ணுல கிற்பிறந் துநும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறு தல்தொண்ட
னேனின்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர் கள்விரும்
பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
7-100-8246:
அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மன மேவைகி
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
7-100-8247:
நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரே
அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே.
7-100-8248:
அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள்
விரவிய வேதஒ லிவிண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந் துவழி தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந் தான்நொடித் தான்மலை உத்தமேனே.
7-100-8249:
இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமன்
நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே.
7-100-8250:
ஊழிதோ று{ழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமி ழால்இசைந் தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாஅஞ்சை யப்பர்க் கறிவிப்பதே.