HolyIndia.Org

திருவிற்கோலம் ( கூவம் ) ஆலய தேவாரம்

திருவிற்கோலம் ( கூவம் ) ஆலயம்
3-23-3042:
உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர் 
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான் 
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய 
செருவினான் உறைவிடந் திருவிற் கோலமே. 

3-23-3043:
சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில் 
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால் 
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச் 
செற்றவன் உறைவிடந் திருவிற் கோலமே. 

3-23-3044:
ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும் 
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான் 
பையர வல்குலாள் பாக மாகவுஞ் 
செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே. 

3-23-3045:
விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை 
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப் 
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ் 
சிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே. 

3-23-3046:
முந்தினான் மூவருள் முதல்வ னாயினான் 
கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான் 
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை 
சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே. 

3-23-3047:
தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம் 
வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான் 
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் 
செகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே. 

3-23-3048:
விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளந் 
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற 
எரித்தவன் இலங்கையர் கோனி டர்படச் 
சிரித்தவன் உறைவிடந் திருவிற் கோலமே. 

3-23-3049:
திரிதரு புரமெரி செய்த சேவகன் 
வரியர வொடுமதி சடையில் வைத்தவன் 
அரியொடு பிரமன தாற்ற லால்உருத் 
தெரியலன் உறைவிடந் திருவிற் கோலமே. 

3-23-3050:
சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர் 
நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்குப் 
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ் 
சீர்மையி னானிடந் திருவிற் கோலமே. 

3-23-3051:
கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய 
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை 
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன 
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.