HolyIndia.Org

திருகுரங்கனின் முட்டம் ஆலய தேவாரம்

திருகுரங்கனின் முட்டம் ஆலயம்
1-31-327:
விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங் 
கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங் 
கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந் 
தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே. 

1-31-328:
விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக் 
கடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில் 
குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம் 
உடையானெனை யாளுடை யெந்தை பிரானே. 

1-31-329:
சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான் 
காலன்றனை ஆருயிர் வவ்விய காலன் 
கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத் 
தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே. 

1-31-330:
வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில் 
தோடார்குழை யான்நல பாலன நோக்கிக் 
கூடாதன செய்த குரங்கணின் முட்டம் 
ஆடாவரு வாரவ ரன்புடை யாரே. 

1-31-331:
இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக் 
கறையார்மிடற் றான்கரி கீறிய கையான் 
குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத் 
துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே. 

1-31-332:
பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங் 
கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக் 
குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம் 
நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே. 

1-31-333:
மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத் 
தோடார்குழை தானொரு காதில் இலங்கக் 
கூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத் 
தாடாரர வம்மரை யார்த்தமர் வானே. 

1-31-334:
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை 
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த 
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங் 
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே. 

1-31-335:
வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும் 
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங் 
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம் 
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே. 

1-31-336:
கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும் 
வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல் 
குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத் 
தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே. 

1-31-337:
கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன் 
கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ் 
சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக 
வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே.