HolyIndia.Org

திரு ஆமாத்தூர் ஆலய தேவாரம்

திரு ஆமாத்தூர் ஆலயம்
2-44-1939:
துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. 

2-44-1940:
கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே. 

2-44-1941:
பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. 

2-44-1942:
கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே. 

2-44-1943:
பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே. 

2-44-1944:
சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற்
காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத்
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே. 

2-44-1945:
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே. 

2-44-1946:
தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. 

2-44-1947:
புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே. 

2-44-1948:
பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே. 

2-44-1949:
ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 

2-50-2004:
குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2005:
பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம்
வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
கரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகில் தந்து மூபம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2006:
நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
பூண்ட கேழல்ம ருப்பரா விரி கொன்றை வாளரி யாமை பூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2007:
சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்
தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
பாலின் நேர்மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதி
ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2008:
தொண்டர் வந்துவ ணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர்
உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
வண்ட லார்கழ னிக்க லந்தும லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2009:
ஓதி யாரண மாய நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
சோதியே சுடரே சுரும் பமர் கொன்றை யாய்திரு நின்றி ய[ருறை
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2010:
மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி ய[டம ணங்க மழ்சடைக்
கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
பங்க யமது வுண்டு வண்டிசை பாட மாமயி லாட விண்முழ
வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2011:
நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்
குன்றெ டுத்தநி சாசரன் திரள் தோளி ருபது தான் நெரிதர
அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2012:
செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடி
வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
தைய லாளொடு பிச்சைக் கிச்சைத யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2013:
புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி நுல்பி டித்தலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
முத்தை வென்ற முறுவ லாளுமை பங்க னென்றிமை யோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே. 

2-50-2014:
வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்
கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே. 

5-44-5665:
மாமாத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூரர னேஅரு ளாயென்றென்
றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே. 

5-44-5666:
சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமத்தூர் அழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே. 

5-44-5667:
காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூரர னேயென் றழைத்தலுந்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே. 

5-44-5668:
பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே. 

5-44-5669:
குராம னுங்குழ லாளொரு கூறனார்
அராம னுஞ்சடை யான்றிரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் ஈசனை
நிராம யன்றனை நாளும் நினைமினே. 

5-44-5670:
பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும்
அத்த னையணி யாமாத்தூர் மேவிய
முத்தி னையடி யேனுள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே. 

5-44-5671:
நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழல் கோலச் சடையிலோர்
ஆற்றி னான்அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை யாளுடை ஈசனே. 

5-44-5672:
பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்
கண்ணித் தாகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர்
கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே. 

5-44-5673:
குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
மிண்ட ரோடெனை வேறு படுத்துயக்
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத்
தண்ட னாரிடம் ஆமாத்தூர் காண்மினே. 

5-44-5674:
வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும் 
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே. 

5-44-5675:
விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி
அடர வோர்விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம்
இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே. 

6-9-6330:
வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று 
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
தோலுடுத்து நுல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 

6-9-6331:
வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை 
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய் 
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே. 

6-9-6332:
கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்
கடிய விடையேறிக் காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 

6-9-6333:
பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி 
இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம் 
பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 

6-9-6334:
உருளுடைய தேர்புரவி யோடும் யானை
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ
அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 

6-9-6335:
வீறுடைய ஏறேறி நீறு பூசி
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக்
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்
பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 

6-9-6336:
கையோர் கபாலத்தர் மானின் றோலர்
கருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீ றாடித்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
மெய்யொரு பாகத் துமையை வைத்து 
மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 

6-9-6337:
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே 
றொற்றிய[ர் உம்மூரே உணரக் கூறீர்
நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 

6-9-6338:
கல்லலகு தாங்கொண்டு காளத் தியார்
கடியவிடை யேறிக் காணக் காண
இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
என்றாருக் கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
துருத்தி பழனமோ நெய்த்தானமோ
அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 

6-9-6339:
மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
மணிமிழலை மேய மணாளர் போலுங்
கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங்
கொடுகொட்டி தாள முடையார் போலுஞ்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந்
தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 

7-45-7680:
காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய் 
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூரெம் அடிகட்காட் 
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள் 
மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே. 

7-45-7681:
பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான் 
தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர 
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக் 
கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே. 

7-45-7682:
காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப் 
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தை 
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார் 
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே. 

7-45-7683:
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள் 
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி ய[ர்புக்குச் 
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை 
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தூரையன் அருளதே. 

7-45-7684:
வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச் 
சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடை 
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால் 
அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே. 

7-45-7685:
காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய் 
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே 
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத் தூரையும் எனையுமாட் 
பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநுல் புரளவே. 

7-45-7686:
எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக் 
கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப் 
பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன் 
அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே. 

7-45-7687:
பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடா 
மின்னவன் மின்னவன் வேதத்தி னுட்பொரு ளாகிய 
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் 
என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே. 

7-45-7688:
தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும் 
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் 
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே 
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே. 

7-45-7689:
உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துளபொருள் 
பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல 
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட் 
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே. 

7-45-7690:
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை 
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை 
மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல் 
பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே.