திருப்பாண்டிக்கொடுமுடி ஆலய தேவாரம்
திருப்பாண்டிக்கொடுமுடி ஆலயம்2-69-2211:
பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும்
பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2212:
தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2213:
சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2214:
நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2215:
போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப்
பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2216:
கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2217:
ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந்
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங்
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2218:
புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங்
கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2219:
திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2220:
புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.
2-69-2221:
கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
5-81-6033:
சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.
5-81-6034:
பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவன் எம்பிரான்
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.
5-81-6035:
ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனும் இத்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.
5-81-6036:
தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.
5-81-6037:
நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டுமிது கைகண்ட யோகமே.
7-48-7712:
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
ய[ரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
7-48-7713:
இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
7-48-7714:
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
7-48-7715:
எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
ய[ரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
7-48-7716:
அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
7-48-7717:
ஏடு வானிளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த
அழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
7-48-7718:
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
7-48-7719:
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம
மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி
லாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
7-48-7720:
சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
தம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்றொ ழுங்கறை
ய[ரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
7-48-7721:
கோணி யபிறை சூடியைக் கறை
ய[ரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே.