HolyIndia.Org

திருஆலவாய் (மதுரை) ஆலய தேவாரம்

திருஆலவாய் (மதுரை) ஆலயம்
1-94-1014:
நீல மாமிடற், றால வாயிலான் 
பால தாயினார், ஞாலம் ஆள்வரே. 

1-94-1015:
ஞால மேழுமாம், ஆல வாயிலார் 
சீல மேசொலீர், காலன் வீடவே. 

1-94-1016:
ஆல நீழலார், ஆல வாயிலார் 
கால காலனார், பால தாமினே. 

1-94-1017:
அந்த மில்புகழ், எந்தை யாலவாய் 
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 

1-94-1018:
ஆட லேற்றினான், கூட லாலவாய் 
பாடி யேமனம், நாடி வாழ்மினே. 

1-94-1019:
அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை 
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே. 

1-94-1020:
அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல் 
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 

1-94-1021:
அரக்க னார்வலி, நெருக்க னாலவாய் 
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே. 

1-94-1022:
அருவன் ஆலவாய், மருவி னான்றனை 
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே. 

1-94-1023:
ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த் 
தேர மண்செற்ற, வீர னென்பரே. 

1-94-1024:
அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன் 
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே. 

2-66-2178:
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு 
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு 
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு 
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 

2-66-2179:
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு 
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு 
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு 
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 

2-66-2180:
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு 
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு 
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு 
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 

2-66-2181:
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு 
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு 
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு 
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 

2-66-2182:
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு 
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் 
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு 
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 

2-66-2183:
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு 
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு 
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு 
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 

2-66-2184:
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு 
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு 
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு 
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே. 

2-66-2185:
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு 
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு 
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு 
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே. 

2-66-2186:
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு 
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு 
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு 
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே. 

2-66-2187:
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட 
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு 
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு 
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே. 

2-66-2188:
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் 
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் 
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் 
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 

3-39-3211:
மானின்நேர்விழி மாதராய்வழு 
திக்குமாபெருந் தேவிகேள் 
பானல்வாயொரு பாலனீங்கிவன் 
என்றுநீபரி வெய்திடேல் 
ஆனைமாமலை ஆதியாய 
இடங்களிற்பல அல்லல்சேர் 
ஈனர்கட்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3212:
ஆகமத்தொடு மந்திரங்க 
ளமைந்தசங்கத பங்கமாப் 
பாகதத்தொ டிரைத்துரைத்த 
சனங்கள்வெட்குறு பக்கமா 
மாகதக்கரி போல்திரிந்து 
புரிந்துநின்றுணும் மாசுசேர் 
ஆகதர்க்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3213:
அத்தகுபொருள் உண்டுமில்லையு 
மென்றுநின்றவர்க் கச்சமா 
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில் 
அழிந்தெழுந்த கவிப்பெயர்ச் 
சத்திரத்தின் மடிந்தொடிந்து 
சனங்கள்வெட்குற நக்கமே 
சித்திரர்க்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3214:
சந்துசேனனும் இந்துசேனனுந் 
தருமசேனனுங் கருமைசேர் 
கந்துசேனனுங் கனகசேனனும் 
முதலதாகிய பெயர்கொளா 
மந்திபோல்திரிந் தாரியத்தொடு 
செந்தமிழ்ப்பயன் அறிகிலா 
அந்தகர்க்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3215:
கூட்டினார்கிளி யின்விருத்தம் 
உரைத்ததோரொலி யின்தொழிற் 
பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும் 
எக்கர்தங்களைப் பல்லறங் 
காட்டியேவரு மாடெலாங்கவர் 
கையரைக்கசி வொன்றிலாச் 
சேட்டைகட்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3216:
கனகநந்தியும் புட்பநந்தியும் 
பவணநந்தியுங் குமணமா 
சுனகநந்தியுங் குனகநந்தியுந் 
திவணநந்தியும் மொழிகொளா 
அனகநந்தியர் மதுவொழிந்தவ 
மேதவம்புரி வோமெனுஞ் 
சினகருக்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3217:
பந்தணம்மவை யொன்றிலம்பரி 
வொன்றிலம்மென வாசக 
மந்தணம்பல பேசிமாசறு 
சீர்மையின்றிய நாயமே 
அந்தணம்மரு கந்தணம்மதி 
புத்தணம்மது சித்தணச் 
சிந்தணர்க்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3218:
மேலெனக்கெதி ரில்லையென்ற 
அரக்கனார்மிகை செற்றதீப் 
போலியைப்பணி யக்கிலாதொரு 
பொய்த்தவங்கொடு குண்டிகை 
பீலிகைக்கொடு பாயிடுக்கி 
நடுக்கியேபிறர் பின்செலுஞ் 
சீலிகட்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3219:
பூமகற்கும் அரிக்குமோர்வரு 
புண்ணியன்னடி போற்றிலார் 
சாமவத்தையி னார்கள்போல்தலை 
யைப்பறித்தொரு பொய்த்தவம் 
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி 
யட்டிவாய்சக திக்குநேர் 
ஆமவர்க்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3220:
தங்களுக்குமச் சாக்கியர்க்குந் 
தரிப்பொணாதநற் சேவடி 
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக் 
கேமடுத்தொரு பொய்த்தவம் 
பொங்குநுல்வழி யன்றியேபுல 
வோர்களைப்பழிக் கும்பொலா 
அங்கதர்க்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே. 

3-39-3221:
எக்கராம்அமண் கையருக்கெளி 
யேனலேன்திரு ஆலவாய்ச் 
சொக்கனென்னு ளிருக்கவேதுளங் 
கும்முடித்தென்னன் முன்னிவை 
தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ் 
நாதன்ஞானசம் பந்தன்வாய் 
ஒக்கவேயுரை செய்தபத்தும் 
உரைப்பவர்க்கிடர் இல்லையே. 

3-47-3298:
காட்டு மாவ துரித்துரி போர்த்துடல் 
நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான் 
வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை 
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே. 

3-47-3299:
மத்த யானையின் ஈருரி மூடிய 
அத்த னேயணி ஆலவா யாய்பணி 
பொய்த்த வன்றவ வேடத்த ராஞ்சமண் 
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே. 

3-47-3300:
மண்ண கத்திலும் வானிலும் எங்குமாந் 
திண்ண கத்திரு ஆலவா யாயருள் 
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண் 
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே. 

3-47-3301:
ஓதி யோத்தறி யாவமண் ஆதரை 
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே 
ஆதி யேதிரு ஆலவா யண்ணலே 
நீதி யாக நினைந்தருள் செய்திடே. 

3-47-3302:
வைய மார்புக ழாயடி யார்தொழுஞ் 
செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய் 
கையி லுண்டுழ லும்மமண் கையரைப் 
பைய வாதுசெ யத்திரு வுள்ளமே. 

3-47-3303:
நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய 
தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய் 
வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச் 
சீறி வாதுசெ யத்திரு வுள்ளமே. 

3-47-3304:
பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழுந் 
தொண்ட ருக்கெளி யாய்திரு ஆலவாய் 
அண்ட னேயமண் கையரை வாதினில் 
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே. 

3-47-3305:
அரக்கன் றான்கிரி யேற்றவன் தன்முடிச் 
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு ஆலவாய்ப் 
பரக்கும் மாண்புடை யாயமண் பாவரைக் 
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே. 

3-47-3306:
மாலும் நான்முக னும்மறி யாநெறி 
ஆல வாயுறை யும்மண்ண லேபணி 
மேலை வீடுண ராவெற்ற ரையரைச் 
சால வாதுசெ யத்திரு வுள்ளமே. 

3-47-3307:
கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண் 
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே 
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய் 
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே. 

3-47-3308:
செந்தெ னாமுர லுந்திரு ஆலவாய் 
மைந்த னேயென்று வல்லம ணாசறச் 
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம் 
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே 

3-51-3339:
செய்ய னேதிரு ஆலவாய் மேவிய 
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் 
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் 
பைய வேசென்று பாண்டியற் காகவே. 

3-51-3340:
சித்த னேதிரு ஆலவாய் மேவிய 
அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை 
எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் 
பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே. 

3-51-3341:
தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச் 
சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை 
எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் 
பக்க மேசென்று பாண்டியற் காகவே. 

3-51-3342:
சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய 
அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள் 
துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் 
பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே. 

3-51-3343:
நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய் 
அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை 
எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர் 
பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே. 

3-51-3344:
தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும் 
அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே 
வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர் 
பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே. 

3-51-3345:
செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய் 
அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக் 
கங்கு லார்அமண் கையரிடுங் கனல் 
பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே. 

3-51-3346:
தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய் 
ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை 
ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர் 
பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே. 

3-51-3347:
தாவி னான்அயன் தானறி யாவகை 
மேவி னாய்திரு ஆலவா யாயருள் 
தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர் 
பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே. 

3-51-3348:
எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய 
அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக் 
குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் 
பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே. 

3-51-3349:
அப்பன் ஆலவா யாதி யருளினால் 
வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக் 
கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ் 
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே. 

3-52-3350:
வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல் 
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே 
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில் 
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே. 

3-52-3351:
பட்டிசைந்த அல்குலாள் பாவையாளோர் பாகமா 
ஒட்டிசைந்த தன்றியும் உச்சியா ளொருத்தியாக் 
கொட்டிசைந்த ஆடலாய் கூடல்ஆல வாயிலாய் 
எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே. 

3-52-3352:
குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய் 
சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ 
கற்றநுற் கருத்தும்நீ அருத்தமின்பம் என்றிவை 
முற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே. 

3-52-3353:
முதிருநீர்ச் சடைமுடி முதல்வநீ முழங்கழல் 
அதிரவீசி யாடுவாய் அழகன்நீ புயங்கன்நீ 
மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய் 
சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே. 

3-52-3354:
கோலமாய நீள்மதிற் கூடல்ஆல வாயிலாய் 
பாலனாய தொண்டுசெய்து பண்டுமின்றும் உன்னையே 
நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலுஞ் 
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே. 

3-52-3355:
பொன்தயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை 
பின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ 
கொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய் 
நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே. 

3-52-3356:
ஆதியந்த மாயினாய் ஆலவாயில் அண்ணலே 
சோதியந்த மாயினாய் சோதியுள்ளோர் சோதியாய் 
கீதம்வந்த வாய்மையால் கிளர்தருக்கி னார்க்கல்லால் 
ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே. 

3-52-3357:
கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடற் 
துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய் 
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய் 
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே. 

3-52-3358:
தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறுங் 
கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய் 
தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலும்நின் 
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே. 

3-52-3359:
தேற்றமில் வினைத்தொழில் தேரருஞ் சமணரும் 
போற்றிசைத்து நின்கழற் புகழ்ந்துபுண்ணி யங்கொளார் 
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய் 
நாற்றிசைக்கும் மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே. 

3-52-3360:
போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான் 
பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால் 
ஆயசொல்லின் மாலைகொண் டாலவாயில் அண்ணலைத் 
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே. 

3-108-3956:
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3957:
வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வமுடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3958:
மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையில் மாமழு வாளனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3959:
அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்
செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3960:
அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3961:
வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை உரித்தஎங் கள்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3962:
அழல தோம்பும் அருமறை யோர்திறம்
விழல தென்னும் அருகர் திறத்திறங்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழல்இ லங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3963:
நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய்
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3964:
நீல மேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலும் நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3965:
அன்று முப்புரஞ் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 

3-108-3966:
கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே. 

3-115-4035:
ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட லுகந்த திருக்கையே
பாலின்நேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மனம் மேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே ஆலவாயுறை யண்டர்கள் அத்தனே. 

3-115-4036:
பாதியாயுடன் கொண்டது மாலையே பாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையே
கோதில்நீறது பூசிடு மாகனே கொண்டநற்கையின் மானிட மாகனே
நாதன்நாடொறும் ஆடுவ தானையே நாடியன்றுரி செய்ததும் ஆனையே
வேதநுல்பயில் கின்றது வாயிலே விகிர்தனுர்திரு ஆலநல் வாயிலே. 

3-115-4037:
காடுநீட துறப்பல கத்தனே காதலால்நினை வார்தம் அகத்தனே
பாடுபேயொடு பூத மசிக்கவே பல்பிணத்தசை நாடி யசிக்கவே
நீடுமாநட மாட விருப்பனே நின்னடித்தொழ நாளும் இருப்பனே
ஆடல்நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினின் மேவிய அப்பனே. 

3-115-4038:
பண்டயன்றலை யொன்று மறுத்தியே பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே தூயவெள்ளெரு தேறி யிருத்தியே
கண்டுகாமனை வேவ விழித்தியே காதலில்லவர் தம்மை யிழித்தியே
அண்டநாயக னேமிகு கண்டனே ஆலவாயினின் மேவிய கண்டனே. 

3-115-4039:
சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால் நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே ஆலவாயர னாகத் தடவியே. 

3-115-4040:
நக்கமேகுவர் நாடுமோர் ஊருமே நாதன்மேனியின் மாசுணம் ஊருமே
தக்கபூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற் கருளொடே
மிக்கதென்னவன் தேவிக் கணியையே மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கல னோடுமே ஆலவாயர னாருமை யோடுமே. 

3-115-4041:
வெய்யவன்பல் உகுத்தது குட்டியே வெங்கண்மாசுணங் கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே அன்பினால்நினை வார்க்கருள் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே ஆலவாயரன் கையது வீணையே. 

3-115-4042:
தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்கன் நிலத்து களித்துமே வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே நின்விரற்றலை யான்மத மத்தனே
ஆளுமாதி முறித்தது மெய்கொலோ ஆலவாயர னுய்த்தது மெய்கொலோ. 

3-115-4043:
பங்கயத்துள நான்முகன் மாலொடே பாதம்நீண்முடி நேடிட மாலொடே
துங்கநற்றழ லின்னுரு வாயுமே தூயபாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கணி னாரிடு பிச்சையே சென்றுகொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத்திகழ் விப்பதி டக்கையே ஆலவாயர னாரதி டக்கையே. 

3-115-4044:
தேரரோடம ணர்க்குநல் கானையே தேவர்நாடொறுஞ் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே கொண்டநீள்கழல் புண்டரி கத்தையே
நேரிலூர்கள் அழித்தது நாகமே நீள்சடைத்திகழ் கின்றது நாகமே
ஆரமாக வுகந்தது மென்பதே ஆலவாயர னாரிட மென்பதே. 

3-115-4045:
ஈனஞானிகள் தம்மொடு விரகனே யேறுபல்பொருள் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுள் ஞானசம் பந்தனே ஆலவாயினின் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினுள் அத்தனே அன்பரானவர் வாயினுள் அத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே. 

3-120-4090:
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4091:
வெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை யொழிந்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4092:
செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவுஞ்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4093:
கணங்களாய் வரினுந் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4094:
செய்யதா மரைமேல் அன்னமே யனைய சேயிழை திருநுதற் செல்வி
பையர வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான் விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4095:
நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவுங்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4096:
முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4097:
நாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகுங்
கோவணம் பூதி சாதனங் கண்டால் தொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள் இருபதும் நெரிதர வு[ன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4098:
மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4099:
தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோ றும் இன்புறு கின்ற குலச்சிறை கருதிநின் றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கண் நெறியிடை வாரா
அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவா யாவதும் இதுவே. 

3-120-4100:
பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே. 

4-62-4757:
வேதியா வேத கீதா 
விண்ணவர் அண்ணா என்றென் 
றோதியே மலர்கள் தூவி 
ஒடுங்கிநின் கழல்கள் காணப் 
பாதியோர் பெண்ணை வைத்தாய் 
படர்சடை மதியஞ் சூடும் 
ஆதியே ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே. 

4-62-4758:
நம்பனே நான்மு கத்தாய் 
நாதனே ஞான மூர்த்தி 
என்பொனே ஈசா என்றென் 
றேத்திநான் ஏசற் றென்றும் 
பின்பினே திரிந்து நாயேன் 
பேர்த்தினிப் பிறவா வண்ணம் 
அன்பனே ஆலவாயில் அப்பனே 
அருள் செயாயே. 

4-62-4759:
ஒருமருந் தாகி யுள்ளாய் 
உம்பரோ டுலகுக் கெல்லாம் 
பெருமருந் தாகி நின்றாய் 
பேரமு தின்சு வையாய்க் 
கருமருந் தாகி யுள்ளாய் 
ஆளும்வல் வினைகள் தீர்க்கும் 
அருமருந் தால வாயில் 
அப்பனே அருள்செ யாயே. 

4-62-4760:
செய்யநின் கமல பாதஞ் 
சேருமா தேவர் தேவே 
மையணி கண்டத் தானே 
மான்மறி மழுவொன் றேந்துஞ் 
சைவனே சால ஞானங் 
கற்றறி விலாத நாயேன் 
ஐயனே ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே. 

4-62-4761:
வெண்டலை கையி லேந்தி 
மிகவுமூர் பலிகொண் டென்றும் 
உண்டது மில்லை சொல்லில் 
உண்டது நஞ்சு தன்னைப் 
பண்டுனை நினைய மாட்டாப் 
பளகனேன் உளம தார 
அண்டனே ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே. 

4-62-4762:
எஞ்சலில் புகலி தென்றென் 
றேத்திநான் ஏசற் றென்றும் 
வஞ்சக மொன்று மின்றி 
மலரடி காணும் வண்ணம் 
நஞ்சினை மிடற்றில் வைத்த 
நற்பொருட் பதமே நாயேற் 
கஞ்சலென் றால வாயில் 
அப்பனே அருள்செ யாயே. 

4-62-4763:
வழுவிலா துன்னை வாழ்த்தி 
வழிபடுந் தொண்ட னேன்உன் 
செழுமலர்ப் பாதங் காணத் 
தெண்டிரை நஞ்ச முண்ட 
குழகனே கோல வில்லீ 
கூத்தனே மாத்தா யுள்ள 
அழகனே ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே. 

4-62-4764:
நறுமலர் நீருங் கொண்டு 
நாடொறு மேத்தி வாழ்த்திச் 
செறிவன சித்தம் வைத்துத் 
திருவடி சேரும் வண்ணம் 
மறிகடல் வண்ணன் பாகா 
மாமறை யங்க மாறும் 
அறிவனே ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே. 

4-62-4765:
நலந்திகழ் வாயின் நுலாற் 
சருகிலைப் பந்தர் செய்த 
சிலந்தியை அரச தாள 
அருளினாய் என்று திண்ணங் 
கலந்துடன் வந்து நின்றாள் 
கருதிநான் காண்ப தாக 
அலந்தனன் ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே. 

4-62-4766:
பொடிக்கொடு பூசிப் பொல்லாக் 
குரம்பையிற் புந்தி யொன்றிப் 
பிடித்துநின் றாள்க ளென்றும் 
பிதற்றிநா னிருக்க மாட்டேன் 
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் 
தெடுத்தலும் இருப துதோள் 
அடர்த்தனே ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே. 

6-19-6433:
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6434:
விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக் 
கரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னைத்
தெண்ணிலவு தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6435:
நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை
நிலமருவி நீரோடக் கண்டான் றன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் றன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைக்
காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று 
கடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித்
தீத்திரளைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6436:
வானமிது வெல்லா முடையான் றன்னை
வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
கானமதில் நடமாட வல்லான் றன்னைக்
கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்
ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை
உணர்வாகி அடியேன துள்ளே நின்ற
தேனமுதைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6437:
ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை
ஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும்
பேரானைப் பிறர்க்கென்று மரியான் றன்னைப்
பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை
அருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ்
சீரானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6438:
மூவனை மூர்த்தியை மூவா மேனி 
உடையானை மூவுலகுந் தானே யெங்கும்
பாவனைப் பாவ மறுப்பான் றன்னைப்
படியெழுத லாகாத மங்கை யோடும்
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு 
விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6439:
துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத்
துன்பந் துடைத்தாள வல்லான் றன்னை
இறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை
எல்லி நடமாட வல்லான் றன்னை
மறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை
மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்
சிறந்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6440:
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற 
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6441:
பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் றன்னைப்
பழியிலியாய் நஞ்சமுண் டமுதீந் தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை
வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை
மேலாய தேவாதி தேவர்க் கென்றுந்
திகைச்சுடரைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6442:
மலையானை மாமேறு மன்னி னானை
வளர்புன் சடையானை வானோர் தங்கள்
தலையானை என்றலையின் உச்சி யென்றுந்
தாபித் திருந்தானைத் தானே யெங்குந்
துலையாக ஒருவரையு மில்லா தானைத்
தோன்றாதார் மதின்மூன்றுந் துவள வெய்த
சிலையானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 

6-19-6443:
தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் றன்னைத்
தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் றன்னைப்
பரிந்தவற்குப் பாசுபத மீந்தான் றன்னை
ஆத்தனை அடியேனுக் கன்பன் றன்னை
அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.