HolyIndia.Org

திருவாய்மூர் ஆலய தேவாரம்

திருவாய்மூர் ஆலயம்
2-111-2670:
தளிரிள வளரென உமைபாடத் 
தாள மிடவோர் கழல்வீசிக் 
கிளரிள மணியர வரையார்த் 
தாடும் வேடக் கிறிமையார் 
விளரிள முலையவர்க் கருள்நல்கி 
வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல் 
வளரிள மதியமொ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2671:
வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி 
விரிதரு கோவண வுடைமேலோர் 
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் 
பலபல கடைதொறும் பலிதேர்வார் 
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் 
செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ 
வந்தனை பலசெய இவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2672:
பண்ணிற் பொலிந்த வீணையர் 
பதினெண் கணமு முணராநஞ் 
சுண்ணப் பொலிந்த மிடற்றினார் 
உள்ள முருகி லுடனாவார் 
சுண்ணப் பொடிநீ றணிமார்பர் 
சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற 
வண்ணப் பிறையோ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2673:
எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல் 
எறிபொறி யரவினொ டாறுமூழ்க 
விரிகிளர் சடையினர் விடையேறி 
வெருவவந் திடர்செய்த விகிர்தனார் 
புரிகிளர் பொடியணி திருவகலம் 
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும் 
வரியர வரைக்கசைத் திவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2674:
அஞ்சன மணிவணம் எழில்நிறமா 
வகமிட றணிகொள வுடல்திமில 
நஞ்சினை யமரர்கள் அமுதமென 
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க 
வெஞ்சின மால்களி யானையின்தோல் 
வெருவுறப் போர்த்ததன் நிறமும/தே 
வஞ்சனை வடிவினோ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2675:
அல்லிய மலர்புல்கு விரிகுழலார் 
கழலிணை யடிநிழ லவைபரவ 
எல்லியம் போதுகொண் டெரியேந்தி 
யெழிலொடு தொழிலவை யிசையவல்லார் 
சொல்லிய அருமறை யிசைபாடிச் 
சூடிள மதியினர் தோடுபெய்து 
வல்லியந் தோலுடுத் திவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2676:
கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் 
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர் 
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் 
முறைமுறை பலிபெய முறுவல்செய்வார் 
பொடியணி வடிவொடு திருவகலம் 
பொன்னென மிளிர்வதோர் அரவினொடும் 
வடிநுனை மழுவினொ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2677:
கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக் 
கண்ணியர் வீணையர் தாமும/தே 
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா 
இறைவனா ருறைவதோ ரிடம்வினவில் 
பட்டிணை யகலல்குல் விரிகுழலார் 
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய 
வட்டணை யாடலொ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2678:
ஏனம ருப்பினொ டெழிலாமை 
யிசையப் பூண்டோ ரேறேறிக் 
கானம திடமா வுறைகின்ற 
கள்வர் கனவில் துயர்செய்து 
தேனுண மலர்கள் உந்திவிம்மித் 
திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற 
வானநன் மதியினோ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2679:
சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் 
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர் 
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் 
பாம்பொடு நுலவை பசைந்திலங்கக் 
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் 
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய 
வாடல்வெண் டலைபிடித் திவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே. 

2-111-2680:
திங்களோ டருவரைப் பொழிற்சோலைத் 
தேனலங் கானலந் திருவாய்மூர் 
அங்கமோ டருமறை யொலிபாடல் 
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி 
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல 
ஞானசம் பந்தன் தமிழ்மாலை 
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் 
தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே. 

5-50-5727:
எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண் டங்கே வந்தடை யாளம் அருளினார் தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனார தென்கொலோ. 

5-50-5728:
மன்னு மாமறைக் காட்டு மணாளனார் உன்னி யுன்னி உறங்குகின் றேனுக்குத் தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி என்னை வாவென்று போனார தென்கொலோ. 

5-50-5729:
தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன் அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேனென்றார் உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன் வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே. 

5-50-5730:
கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன் ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன் வழியிற் கண்டிலேன் வாய்மூர் அடிகள்தஞ் சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ. 

5-50-5731:
ஒள்ளி யாரிவர் அன்றிமற் றில்லையென் றுள்கி யுள்கி உகந்திருந் தேனுக்குத் தௌ;ளி யாரிவர் போலத் திருவாய்மூர்க்? கள்ளி யாரவர் போலக் கரந்ததே. 

5-50-5732:
யாதே செய்துமி யாமலோ நீயென்னில் ஆதே யேயும் அளவில் பெருமையான் மாதே வாகிய வாய்மூர் மருவினார் போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ. 

5-50-5733:
பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு வாடி வாட்டந் தவிர்ப்பார் அவரைப்போல் தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ. 

5-50-5734:
திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உண்ணின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. 

5-50-5735:
தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும் நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன் எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப் புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ. 

5-50-5736:
தீண்டற் கரிய திருவடி யொன்றினால் மீண்டற் கும்மிதித் தாரரக் கன்றனை வேண்டிக் கொண்டேன்திரு வாய்மூர் விளக்கினைத் தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே.	 

6-77-7008:
பாட வடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

6-77-7009:
பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

6-77-7010:
மண்ணைத் திகழ நடம தாடும்
வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்
விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்
வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்
நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்
நாலு மறையங்க மோதக் கண்டேன்
வண்ணப் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

6-77-7011:
விளைத்த பெரும்பத்தி கூர நின்று
மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்
இளைக்குங் கதநாக மேனி கண்டேன்
என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்
திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்
சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று
வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

6-77-7012:
கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன்
காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண்
^ன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்
உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்
நான்மறை யானோடு நெடிய மாலும்
நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக
மான்மறி தங்கையின் மருவக் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

6-77-7013:
அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்
அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்
முடியார் சடைமேல் அரவ மூழ்க
மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்
கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

6-77-7014:
குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்
இழையார் புரிநுல் வலத்தே கண்டேன்
ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

6-77-7015:
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

6-77-7016:
மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்
வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்
கையம் பரனெரித்த காட்சி கண்டேன்
கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்
ஐயம் பலவு[ர் திரியக் கண்டேன்
அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

6-77-7017:
கலங்க இருவர்க் கழலாய் நீண்ட
காரணமுங் கண்டேன் கருவாய் நின்று
பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்
பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்
இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்
வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.