HolyIndia.Org

திருவிற்குடி ஆலய தேவாரம்

திருவிற்குடி ஆலயம்
2-108-2638:
வடிகொள் மேனியர் வானமா மதியினர் 
நதியினர் மதுவார்ந்த 
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் 
உடைபுலி யதளார்ப்பர் 
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை 
விற்குடி வீரட்டம் 
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை 
அருவினை யடையாவே. 

2-108-2639:
களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் 
கடிகமழ் சடைக்கேற்றி 
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் 
பொருகரி யுரிபோர்த்து 
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை 
விற்குடி வீரட்டம் 
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் 
வருத்தம தறியாரே. 

2-108-2640:
கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி 
மார்பினர் வலங்கையில் 
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் 
தாடிய வேடத்தர் 
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி 
விற்குடி வீரட்டம் 
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் 
பேணுவ ருலகத்தே. 

2-108-2641:
பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் 
பொலிதர நலமார்ந்த 
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு 
கடலெழு விடமுண்டார் 
வேத மோதிய நாவுடை யானிடம் 
விற்குடி வீரட்டஞ் 
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி 
தீவினை கெடுமாறே. 

2-108-2642:
கடிய ஏற்றினர் கனலன மேனியர் 
அனலெழ வு[ர்மூன்றும் 
இடிய மால்வரை கால்வளைத் தான்றன 
தடியவர் மேலுள்ள 
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை 
விற்குடி வீரட்டம் 
படிய தாகவே பரவுமின் பரவினாற் 
பற்றறும் அருநோயே. 

2-108-2643:
பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் 
கையினர் மெய்யார்ந்த 
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர் 
அரியவர் அல்லார்க்கு 
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி 
விற்குடி வீரட்டம் 
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் 
கிடர்கள்வந் தடையாவே. 

2-108-2644:
இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை 
யிகலழி தரவு[ன்று 
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு 
பொருளினன் இருளார்ந்த 
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி 
விற்குடி வீரட்டந் 
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் 
துன்பநோ யடையாவே. 

2-108-2645:
செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் 
திருவடி யறியாமை 
எங்கு மாரெரி யாகிய இறைவனை 
யறைபுனல் முடியார்ந்த 
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் 
விற்குடி வீரட்டந் 
தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர் 
தவமல்கு குணத்தாரே. 

2-108-2646:
பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ 
ராடைய ரவர்வார்த்தை 
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் 
பரிவுறு வீர்கேண்மின் 
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் 
விற்குடி வீரட்டங் 
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் 
கருத்துறுங் குணத்தாரே. 

2-108-2647:
விலங்க லேசிலை யிடமென வுடையவன் 
விற்குடி வீரட்டத் 
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை 
யெழில்திகழ் கழல்பேணி 
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம் 
பந்தனற் றமிழ்மாலை 
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் 
மற்றது வரமாமே.