நன்னிலம் ஆலய தேவாரம்
நன்னிலம் ஆலயம்7-98-8219:
தண்ணியல் வெம்மையி னான்றலை யிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழி யார்இடக் கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறை யோர்முறை யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7-98-8220:
வலங்கிளர் மாதவஞ் செய்மலை மங்கையோர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங் கச்சடை யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில் தண்பனி வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7-98-8221:
கச்சிய னின்கருப் பூர்விருப் பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண் ணியுல கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலை யான்நுரை தீர்புன லாற்றொழுவார் நச்சிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே.
7-98-8222:
பாடிய நான்மறை யான்படு பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத் தானடி போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையி னார்பல தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7-98-8223:
பிலந்தரு வாயினொ டுபெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன்நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7-98-8224:
வெண்பொடி மேனியி னான்கரு நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடை யான்பிர மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறை யோர்பயின் றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7-98-8225:
தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய் யிற்பகட் டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கம லம்மலர் மேல்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7-98-8226:
குளிர்தரு திங்கள்கங் கைகுர வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடை மேலுடை யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங் கைதட மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7-98-8227:
கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங் கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்திய ருச்சுன னுக்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழ வில்தகு சைவர் தவத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7-98-8228:
கருவரை போலரக் கன்கயி
லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லாலடர்த் தின்னருள்
செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை
வன்றிகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே.
7-98-8229:
கோடுயர் வெங்களிற் றுத்திகழ்
கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கிதந் தைசடை
யன்றிரு வாரூரன்
பாடிய பத்தும்வல் லார்புகு
வார்பர லோகத்துள்ளே.