அரிசிற்கரைபுத்தூர் (அழகாபுத்தூர் ) ஆலய தேவாரம்
அரிசிற்கரைபுத்தூர் (அழகாபுத்தூர் ) ஆலயம்2-63-2146:
மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே
துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.
2-63-2147:
மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்
ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர்
நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும்
பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே.
2-63-2148:
பல்லார் தலைசேர் மாலைசூடிப் பாம்பும்பூண்
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக்
கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்
பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே.
2-63-2149:
வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற
கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர்
அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.
2-63-2150:
என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை
மின்போற் புரிநுல் விரவிப் பூண்ட மணிமார்பர்
அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.
2-63-2151:
வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்
தௌ;ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும்
புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.
2-63-2152:
நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானுர்
அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
2-63-2153:
இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.
2-63-2154:
முள்ளார் கமலத் தயன்மால் முடியோ டடிதேட
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங்
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.
2-63-2155:
கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல
பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே.
2-63-2156:
நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே.
5-61-5838:
முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.
5-61-5839:
பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துரு காமனத் தார்களைப்
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.
5-61-5840:
அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாந்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.
5-61-5841:
வேத னைமிகு வீணையின் மேவிய
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை
நாத னைந்நினைந் தென்மனம் நையுமே.
5-61-5842:
அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.
5-61-5843:
பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப்
பூம்பு னலும்பொ திந்தபுத் தூருளான்
நாம்ப ணிந்தடி போற்றிட நாடொறுஞ்
சாம்பல் என்பு தனக்கணி யாகுமே.
5-61-5844:
கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர்
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.
5-61-5845:
காற்றி னுங்கடி தாகி நடப்பதோர்
ஏற்றி னும்மிசைந் தேறுவர் என்பொடு
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப்
போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே.
5-61-5846:
முன்னு முப்புரஞ் செற்றன ராயினும்
அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம்
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே.
5-61-5847:
செருத்த னாற்றன தேர்செல வுய்த்திடுங்
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல்
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.
7-9-7307:
மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர்
எரித்தீர் வருமுப் புரங்கள்
சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர்
சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக்
கலவம் மயிற்பீலியுங் காரகிலும்
அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7-9-7308:
அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத்
தீரழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப்
பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை
வாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி
லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
7-9-7309:
தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ்
சந்திரன் சவிதாவிய மானனானீர்
சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித்
தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்
முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும்
முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி
அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7-9-7310:
கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம்
வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில்
உமக்கார் எதிரெம் பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக்
காமனை வேவக் கடைக்கண்ணினாற்
பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
7-9-7311:
வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும்
வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே
உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்
இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய
இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7-9-7312:
மூஅகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி
சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி
மேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு
மென்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி
லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
மூதிரு அரிசிற்கரைப்புத்தூரென்னு மித்தலத்தில் ஆதிசைவப்
பிராமணகுலத்தில் திருவவதாரஞ்செய்து புகழ்த்துணை
நாயனாரெனப் பெயரும் பெற்று மிகுந்தஅன்புடன்
பரமசிவத்துக்குத் திருமஞ்சனமுதலிய உபசாரங்கள்
ஆகமமுறைவழுவாமல் செய்துகொண்டு வருநாளில்
பஞ்சம்நேரிட்டுச் சிலநாளுணவின்றித் திருமேனியிளைத்து
வலிவின்றியுமொருநாள் திருமஞ்சனஞ்செய்கையில்
அந்தக்குடம் நழுவிச் சிவலிங்கப்பெருமான் திருமுடிக்கண்விழலும்
நாயனார் அஞ்சி நடுங்குதல் திருவுளத்திற்கொண்டு
பரமசிவங் கிருபைகூர்ந்து பஞ்சம் நீங்குகிறவரைக்கும்
ஒருபடிக் காசு அருள்செய்த கிருபையின் பெருமை இந்த
ஆறாவது தேவாரத்தில் விளங்கக்கூறியது.
7-9-7313:
பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப்
பகலோன்முத லாப்பல தேவரையுந்
தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை
என்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி
விளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றி
அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7-9-7314:
பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக்
குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்
பெருங்கா டரங்காகநின் றாடலென்னே
கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங்
கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
7-9-7315:
மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர்
புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள் அரவோ டென்பணி கலனா
முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்
கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7-9-7316:
கடிக்கும் அரவால் மலையால் அமரர்
கடலைக் கடையவெழு காளகூடம்
ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை
உமக்கேயமு தாகவுண் டீருமிழீர்
இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி
இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை
அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7-9-7317:
காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை
யோடகி லுந்திட் டிருகரையும்
போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப்
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமி ழைந்தினோ டைந்தழ
காலுரைப் பார்களுங் கேட்பவருஞ்
சீரூர் தருதேவர் கணங்க ளொடும்
இணங்கிச் சிவலோகம தெய்துவரே.