திருத்துருத்தி ( குத்தாலம்) ஆலய தேவாரம்
திருத்துருத்தி ( குத்தாலம்) ஆலயம்3-4-2834:
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
3-4-2835:
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
3-4-2836:
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
3-4-2837:
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
3-4-2838:
கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
3-4-2839:
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
3-4-2840:
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
3-4-2841:
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
3-4-2842:
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
3-4-2843:
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
3-4-2844:
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
4-56-4696:
மாயிரு ஞால மெல்லாம்
மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப்
படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த
கழுமல வு[ரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4-56-4697:
மடந்தை பாகத்தர் போலும்
மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங்
கொல்புலித் தோலர் போலுங்
கடைந்தநஞ் சுண்பர் போலுங்
காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க் கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4-56-4698:
உற்றநோய் தீர்ப்பர் போலும்
உறுதுணை யாவர் போலுஞ்
செற்றவர் புரங்கள் மூன்றுந்
தீயெழச் செறுவர் போலுங்
கற்றவர் பரவி யேத்தக்
கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4-56-4699:
மழுவமர் கையர் போலும்
மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும்
என்புகொண் டணிவர் போலுந்
தொழுதெழுந் தாடிப் பாடித்
தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4-56-4700:
பொடியணி மெய்யர் போலும்
பொங்குவெண் ணூலர் போலுங்
கடியதோர் விடையர் போலுங்
காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும்
வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4-56-4701:
வக்கரன் உயிரை வவ்வக்
கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந்
தானவர் தலைவர் போலுந்
துக்கமா மூடர் தம்மைத்
துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும்
ஆவடு துறைய னாரே.
4-56-4702:
விடைதரு கொடியர் போலும்
வெண்புரி நுலர் போலும்
படைதரு மழுவர் போலும்
பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும்
உலகமு மாவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும்
ஆவடு துறைய னாரே.
4-56-4703:
முந்திவா னோர்கள் வந்து
முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார்
நடுவுடை யார்கள் நிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார்
திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும்
ஆவடு துறைய னாரே.
4-56-4704:
பானமர் ஏன மாகிப்
பாரிடந் திட்ட மாலுந்
தேனமர்ந் தேறும் அல்லித்
திசைமுக முடைய கோவுந்
தீனரைத் தியக் கறுத்த
திருவுரு வுடையர் போலும்
ஆனரை ஏற்றர் போலும்
ஆவடு துறைய னாரே.
4-56-4705:
பார்த்தனுக் கருள்வர் போலும்
படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர
இன்பங்கள் கொடுப்பர் போலுங்
கூத்தராய்ப் பாடி யாடிக்
கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவாய் அலறு விப்பார்
ஆவடு துறைய னாரே.
4-57-4706:
மஞ்சனே மணியு மானாய்
மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று
நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து
துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும்
ஆவடு துறையு ளானே.
4-57-4707:
நானுகந் துன்னை நாளும்
நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பும் நாயேன்
உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந் தேயு கந்த
தகவிலாத் தொண்ட னேன்நான்
ஆனுகந் தேறு வானே
ஆவடு துறையு ளானே.
4-57-4708:
கட்டமே வினைக ளான
காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும்
உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்திப்
பலிதிரிந் தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே
ஆவடு துறையு ளானே.
4-57-4709:
பெருமைநன் றுடைய தில்லை
யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி
உகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வு[னைக்
கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட
ஆவடு துறையு ளானே.
4-57-4710:
துட்டனாய் வினைய தென்னுஞ்
சுழித்தலை அகப்பட் டேனைக்
கட்டனாய் ஐவர் வந்து
கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை
மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும்
ஆவடு துறையு ளானே.
4-57-4711:
காரழற் கண்ட மேயாய்
கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே
யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே
நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும்
ஆவடு துறையு ளானே.
4-57-4712:
செறிவிலேன் சிந்தை யுள்ளே
சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்
கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன்
நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன்
ஆவடு துறையு ளானே.
4-57-4713:
கோலமா மங்கை தன்னைக்
கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன்
செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை
நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட
ஆவடு துறையு ளானே.
4-57-4714:
நெடியவன் மலரி னானும்
நேர்ந்திரு பாலும் நேடக்
கடியதோர் உருவ மாகிக்
கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே
என்றுதாம் பேச லாகார்
அடியனேன் நெஞ்சி னுள்ளார்
ஆவடு துறையு ளானே.
4-57-4715:
மலைக்குநே ராய ரக்கன்
சென்றுற மங்கை அஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே
தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி
ஒறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும்
ஆவடு துறையு ளானே.
5-29-5514:
நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழை
மறைக்க வாலியள் அல்லளிம் மாதராள்
பிறைக்க வாலிப் பெரும்புனல் ஆவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.
5-29-5515:
தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறை
அளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக்
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.
5-29-5516:
பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங் கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.
5-29-5517:
கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொள் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்டுறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.
5-29-5518:
கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமு தேயென்னும் பண்பினன்
அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை
ஒருவன் என்னை யுடையகோ வென்னுமே.
5-29-5519:
குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமுந்
தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.
5-29-5520:
பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்லள் ஆவடு தண்டுறை
மஞ்ச னோடிவள் ஆடிய மையலே.
5-29-5521:
பிறையுஞ் சூடிநற் பெண்ணொடா ணாகிய
நிறையு நெஞ்சமும் நீர்மையுங் கொண்டவன்
அறையும் பூம்பொழில் ஆவடு தண்டுறை
இறைவன் என்னை யுடையவன் என்னுமே.
5-29-5522:
வையந் தானளந் தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான்
ஐயன் ஆவடு தண்டுறை யாவெனக்
கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.
5-29-5523:
பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவன் ஆவடு தண்டுறை
நக்கன் என்னுமிந் நாணிலி காண்மினே.
6-46-6701:
நம்பனை நால்வேதங் கரைகண் டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக் கம்பனைக் கல்லா லிருந்தான் றன்னைக் கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச் செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6702:
மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை வெண்முகிலா யெழுந்துமழை பொழிவான் றன்னைத் தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி என்னானை யெந்தை பெருமான் றன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6703:
பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப் பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின் தொத்தினைத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6704:
பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பித்தரா மடியார்க்கு முத்தி காட்டும் ஏணியை இடர்க்கடலுள் சுழிக்கப் பட்டிங் கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந் தோணியைத் தொண்டனேன் தூய சோதிச் சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின் ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6705:
ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை உதயத்தி னுச்சியை உருமா னானைப் பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப் பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத் திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித் தீங்கரும்பின் இன்சுவையைத் திகழுஞ் சோதி அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6706:
ஏற்றானை யெண்டோ ளுடையான் றன்னை எல்லி நடமாட வல்லான் றன்னைக் கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக் குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் றன்னை நீற்றானை நீளரவொன் றார்த்தான் றன்னை நீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6707:
கைம்மான மதகளிற்றை யுரித்தான் றன்னைக் கடல்வரைவான் ஆகாச மானான் றன்னைச் செம்மானப் பவளத்தைத் திகழு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயா னானை எம்மானை யென்மனமே கோயி லாக இருந்தானை என்புருகு மடியார் தங்கள் அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6708:
மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை வெள்ளடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங் கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த கண்ணானைக் கண்மூன் றுடையான் றன்னைப் பையா டரவமதி யுடனே வைத்த சடையானைப் பாய்புலித்தோ லுடையான் றன்னை ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6709:
வேண்டாமை வேண்டுவது மில்லான் றன்னை விசயனைமுன் னசைவித்த வேடன் றன்னைத் தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச் சூலப் படையானைக் காலன் வாழ்நாள் மாண்டோட வுதைசெய்த மைந்தன் றன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும் ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6710:
பந்தணவு மெல்விரலாள் பாகன் றன்னைப் பாடலோ டாடல் பயின்றான் றன்னைக் கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக் கோலமா நீல மிடற்றான் றன்னைச் செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத் திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-46-6711:
தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் றன்னைத் தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் றன்னைப் பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பெருவலியால் மலையெடுத்த அரக்கன் றன்னை நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை நீசனேன் உடலுறுநோ யான தீர அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6-47-6712:
திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க உருவேயென் னுறவே யென்னுனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோ யடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6-47-6713:
மாற்றேன் எழுத்தஞ்சு மென்றன் நாவின் மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின் ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால் மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு வேதனைக்கே இடங்கொடுத்து நாளு நாளும் ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6-47-6714:
வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம் உரையா வுயிர்போகப் பெறுவே னாகில் உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க் கரையா அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6-47-6715:
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலைவளைவித் துமையவளை அஞ்ச நோக்கிக் கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங் களிறுரித்த கங்காளா எங்கள் கோவே நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும் நில்லா வுயிரோம்பு நீத னேனான் அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6-47-6716:
நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித் துறவாத துன்பந் துறந்தேன் றன்னைச் சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னே உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட அறவா அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6-47-6717:
கோனா ரணன்அங்கந் தோள்மேற் கொண்டு கொழுமலரான் றன்சிரத்தைக் கையி லேந்திக் கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக் கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர் நானார் உமக்கோர் வினைக்கே டனேன் நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6-47-6718:
உழையுரித்த மானுரிதோ லாடை யானே உமையவள்தம் பெருமானே இமையோ ரேறே கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா கயிலாய மலையானே உன்பா லன்பர் பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடனன்றே பேரருளுன் பால தன்றே அழையுறுத்து மாமயில்கள் ஆலுஞ் சோலை ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6-47-6719:
உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோர் உலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு கலந்தார் மனங்கவருங் காத லானே கனலாடுங் கையவனே ஐயா மெய்யே மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்தழுந்தி நாளு நாளும் அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6-47-6720:
பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப் பசுவேறி ய[ரூரன் பலிகொள் வானே கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங் கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில் எல்லாரு மென்றன்னை இகழ்வர் போலும் ஏழையமண் குண்டர்சாக் கியர்க ளொன்றுக் கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6-47-6721:
துறந்தார்தந் தூநெறிக்கட் சென்றே னல்லேன் துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன் பிறந்தேன் நின்றிருவருளே பேசி னல்லாற் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் றன்னைச் செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம் அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
7-66-7896:
மறைய வனொரு மாணிவந் தடைய
வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மானென்றெப் போதும்
ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7-66-7897:
தெருண்ட வாயிடை நுல்கொண்டு சிலந்தி
சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச்
சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7-66-7898:
திகழும் மாலவன் ஆயிரம் மலரால்
ஏத்து வானொரு நீண்மலர் குறையப்
புகழி னாலவன் கண்ணிடந் திடலும்
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித்
தேவ தேவநின் றிறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7-66-7899:
வீரத் தாலொரு வேடுவ னாகி
விசைத்தோர் கேழலைத் துரந்துசென் றணைந்து
போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்
புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
வாரத் தாலுன நாமங்கள் பரவி
வழிபட் டுன்றிற மேநினைந் துருகி
ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7-66-7900:
ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப்
புகழி னாலருள் ஈந்தமை அறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றி
வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7-70-7933:
கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7-70-7934:
மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்
கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7-70-7935:
ஒப்பி லாமுலை யாளொரு பாகா
உத்த மாமத்த மார்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே
மூவ ருக்கருள் செய்யவல் லானே
செப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ்
செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7-70-7936:
கொதியி னால்வரு காளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயால்
மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னாலிமை யோர்தொழு தேத்தும்
விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7-70-7937:
வந்த வாளரக் கன்வலி தொலைத்து
வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடி பூசவல் லானே
வேட னாய்விச யற்கருள் புரிந்த
இந்து சேகர னேஇமை யோர்சீர்
ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7-70-7938:
குறைவி லாநிறை வேகுணக் குன்றே
கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை அன்றிமற் றடியேன்
ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7-70-7939:
வெய்ய மாகரி ஈருரி யானே
வேங்கை ஆடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅடல் ஆழியன் றரிதான்
வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிகழ் ஒளியே
செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7-70-7940:
கோதி லாவமு தேஅருள் பெருகு
கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே
பசுப தீபர மாபர மேட்டீ
தீதி லாமலை யேதிரு வருள்சேர்
சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7-70-7941:
வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாவெயி றாமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7-70-7942:
வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
சாத லும்பிறப் பும்மறுப் பாரே.