திருநல்லம் ( கோனேரி ராஜபுரம்) ஆலய தேவாரம்
திருநல்லம் ( கோனேரி ராஜபுரம்) ஆலயம்3-18-2987:
துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை எந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே.
3-18-2988:
மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.
3-18-2989:
கணியணி மலர்கொடு காலை மாலையும்
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி உமையொடு தாமுந் தங்கிடம்
மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.
3-18-2990:
கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.
3-18-2991:
விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்
மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே.
3-18-2992:
நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.
3-18-2993:
எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகி லணவிய மாடக் கோயிலே.
3-18-2994:
மலையன இருபது தோளி னான்வலி
தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாடக் கோயிலே.
3-18-2995:
மாலவன் மலரவன் நேடி மால்கொள
மாலெரி யாகிய வரதர் வைகிடம்
மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாடக் கோயிலே.
3-18-2996:
கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாடக் கோயிலே.
3-18-2997:
மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.