HolyIndia.Org

திருப்பராய்த்துறை ஆலய தேவாரம்

திருப்பராய்த்துறை ஆலயம்
1-135-1448:
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை 
கூறுசேர்வதொர் கோலமாய்ப் 
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை 
ஆறுசேர்சடை அண்ணலே. 

1-135-1449:
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை 
வந்தபூம்புனல் வைத்தவர் 
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை 
அந்தமில்ல அடிகளே. 

1-135-1450:
வேதர்வேதமெல் லாமுறையால்விரித் 
தோதநின்ற ஒருவனார் 
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை 
ஆதியாய அடிகளே. 

1-135-1451:
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு 
நுலுந்தாமணி மார்பினர் 
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை 
ஆலநீழல் அடிகளே. 

1-135-1452:
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல் 
இரவில்நின்றெரி யாடுவர் 
பரவினாரவர் வேதம்பராய்த்துறை 
அரவமார்த்த அடிகளே. 

1-135-1453:
மறையுமோதுவர் மான்மறிக்கையினர் 
கறைகொள்கண்ட முடையவர் 
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை 
அறையநின்ற அடிகளே. 

1-135-1454:
விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர் 
சடையிற்கங்கை தரித்தவர் 
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை 
அடையநின்ற அடிகளே. 

1-135-1455:
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை 
நெருக்கினார்விர லொன்றினால் 
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை 
அருக்கன்றன்னை அடிகளே. 

1-135-1456:
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த் 
தோற்றமும் மறியாதவர் 
பாற்றினார்வினை யானபராய்த்துறை 
ஆற்றல்மிக்க அடிகளே. 

1-135-1457:
திருவிலிச்சில தேரமண்ஆதர்கள் 
உருவிலாவுரை கொள்ளேலும் 
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை 
மருவினான்றனை வாழ்த்துமே. 

1-135-1458:
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச் 
செல்வர்மேற் சிதையாதன 
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ் 
செல்வமாமிவை செப்பவே. 

5-30-5524:
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே. 

5-30-5525:
மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கஞ்
சேட னார்தென் பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே. 

5-30-5526:
பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்
சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை அறிவரே. 

5-30-5527:
முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை அறிவரே. 

5-30-5528:
போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே. 

5-30-5529:
நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்றென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே. 

5-30-5530:
நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நுல்
பொருப்ப ராவி இழிபுனல் போன்றதே. 

5-30-5531:
எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற்
பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே. 

5-30-5532:
நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராவளைத் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை அறிவரே. 

5-30-5533:
தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே. 

5-30-5534:
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.