HolyIndia.Org

திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) ஆலய தேவாரம்

திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) ஆலயம்
1-13-130:
குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ 
பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன் 
அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும் 
விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே. 

1-13-131:
ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான் 
ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான் 
மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள் 
வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. 

1-13-132:
செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் 
பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம் 
உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல் 
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. 

1-13-133:
அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில் 
மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங் 
கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி 
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. 

1-13-134:
எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப் 
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க் 
கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம் 
விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே. 

1-13-135:
வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான் 
திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை 
அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள் 
விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே. 

1-13-136:
மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம் 
ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள் 
தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம் 
மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. 

1-13-137:
பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன் 
கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து 
சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின் 
விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. 

1-13-138:
வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால் 
அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல் 
உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம் 
விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. 

1-13-139:
தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப் 
பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர் 
கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த 
விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. 

1-13-140:
விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத் 
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன் 
துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும் 
விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.