HolyIndia.Org

திருப்புன்கூர் ஆலய தேவாரம்

திருப்புன்கூர் ஆலயம்
1-27-283:
முந்தி நின்ற வினைக ளவைபோகச் 
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் 
அந்தம் இல்லா அடிக ளவர்போலுங் 
கந்த மல்கு கமழ்புன் சடையாரே. 

1-27-284:
மூவ ராய முதல்வர் முறையாலே 
தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர் 
ஆவ ரென்னும் அடிக ளவர்போலும் 
ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே. 

1-27-285:
பங்க யங்கள் மலரும் பழனத்துச் 
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க் 
கங்கை தங்கு சடையா ரவர்போலும் 
எங்கள் உச்சி உறையும் மிறையாரே. 

1-27-286:
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம் 
திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர் 
உரையின் நல்ல பெருமா னவர்போலும் 
விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே. 

1-27-287:
பவழ வண்ணப் பரிசார் திருமேனி 
திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர் 
அழக ரென்னும் அடிக ளவர்போலும் 
புகழ நின்ற புரிபுன் சடையாரே. 

1-27-288:
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் 
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப் 
பொருந்தி நின்ற அடிக ளவர்போலும் 
விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. 

1-27-289:
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும் 
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர் 
ஆர நின்ற அடிக ளவர்போலுங் 
கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே. 

1-27-290:
மலையத னாருடை யமதில் மூன்றுஞ் 
சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த் 
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை 
மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே. 

1-27-291:
நாட வல்ல மலரான் மாலுமாய்த் 
தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர் 
ஆட வல்ல அடிக ளவர்போலும் 
பாட லாடல் பயிலும் பரமரே. 

1-27-292:
குண்டு முற்றிக் கூறை யின்றியே 
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல் 
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க் 
கண்டு தொழுமின் கபாலி வேடமே. 

1-27-293:
மாட மல்கு மதில்சூழ் காழிமன் 
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர் 
நாட வல்ல ஞான சம்பந்தன் 
பாடல் பத்தும் பரவி வாழ்மினே. 

6-11-6350:
பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப்
பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித் 
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீ^ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

6-11-6351:
பின்றானும் முன்றானு மானான் றன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னை
நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி 
நல்வினையுந் தீவினையு மானான் றன்னைச்
சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நின்றாய நீ^ர் நிலாவி னானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

6-11-6352:
இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை
இனியநினை யாதார்க் கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீ^ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

6-11-6353:
கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயா டியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீ^ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

6-11-6354:
நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீக்காத பேரொளிசேர் நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

6-11-6355:
பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த 
முடையானை முடைநாறும் புன்க லத்தில்
ஊணலா வு[ணானை யொருவர் காணா 
உத்தமனை யொளிதிகழும் மேனி யானைச்
சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீணுலா மலர்க்கழனி நீ^ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

6-11-6356:
உரையார் பொருளுக் குலப்பி லானை
ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப்
புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்
புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிரையார் மணிமாட நீ^ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

6-11-6357:
கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை 
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்
சீரரவக் கழலானை நிழலார் சோலைத் 
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீரரவத் தண்கழனி நீ^ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

6-11-6358:
கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் 
புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்
செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித் 
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீ^ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

6-11-6359:
இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே
இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை
நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை 
நலனழித்து நன்கருளிச் செய்தான் றன்னைத்
திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிகழுமா வல்லானை நீ^ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே. 

7-55-7784:
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக 
வந்த காலன்றன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன் 
எந்தை நீயெனை நமன்றமர் நலியின் இவன்மற் றென்னடி யானென விலக்குஞ் 
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 

7-55-7785:
வைய கமுற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலந் தருகோம் 
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் 
பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ் 
செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 

7-55-7786:
ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக் 
கோத னங்களின் பால்கறந் தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற 
தாதை தாளற எறிந்ததண் டிக்குன் சடைமி சைமலர் அருள்செயக் கண்டு 
பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன் பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 

7-55-7787:
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானுங் 
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் 
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் 
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 

7-55-7788:
கோல மால்வரை மத்தென நாட்டிக் 
 கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த 
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய 
 அமரர் கட்கருள் புரிவது கருதி 
நீல மார்கடல் விடந்தனை உண்டு 
 கண்டத் தேவைத்த பித்தநீ செய்த 
சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன் 
 செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 

7-55-7789:
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் 
 இயங்கு தீவளி ஞாயிறு திங்கள் 
மயக்கம் இல்புலி வானரம் நாகம் 
 வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் 
அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை 
 அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு 
திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன் 
 செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 

7-55-7790:
போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப் 
 பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து 
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத் 
 தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட 
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை 
 நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த 
தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன் 
 செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 

7-55-7791:
மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில் 
 இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல் 
காவ லாளரென் றேவிய பின்னை 
 ஒருவ நீகரி காடரங் காக 
மானை நோக்கியோர் மாநடம் மகிழ 
 மணிமு ழாமுழக் கஅருள் செய்த 
தேவ தேவநின் றிருவடி அடைந்தேன் 
 செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 

7-55-7792:
அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம் 
 அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து 
எறியு மாகடல் இலங்கையர் கோனைத் 
 துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக் 
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக் 
 கோல வாளொடு நாளது கொடுத்த 
செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன் 
 செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 

7-55-7793:
கம்ப மால்களிற் றின்னுரி யானைக் 
 காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச் 
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச் 
 செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை 
உம்பர் ஆளியை உமையவள் கோனை 
 ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந் 
தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ 
 டைந்தும் வல்லவர் அருவினை இலரே.