HolyIndia.Org

திருவெண்காடு ஆலய தேவாரம்

திருவெண்காடு ஆலயம்
2-48-1982:
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. 

2-48-1983:
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. 

2-48-1984:
மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே. 

2-48-1985:
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே. 

2-48-1986:
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே. 

2-48-1987:
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 

2-48-1988:
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. 

2-48-1989:
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 

2-48-1990:
கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 

2-48-1991:
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே. 

2-48-1992:
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே. 

2-61-2124:
உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித் 
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள் 
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும் 
வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே. 

2-61-2125:
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப் 
பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல் 
ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும் 
வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே. 

2-61-2126:
தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக் 
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள் 
உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும் 
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே. 

2-61-2127:
நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன் 
உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே 
கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும் 
விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே. 

2-61-2128:
பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென் 
றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள் 
தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும் 
வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே. 

2-61-2129:
ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென் 
றளிய ராகி அழுதுற் று{றும் அடியார்கட் 
கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும் 
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே. 

2-61-2130:
கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால் 
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய் 
ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும் 
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே. 

2-61-2131:
வளையார் முன்கை மலையாள் வெருவ வரைய[ன்றி 
முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும் 
இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும் 
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே. 

2-61-2132:
கரியா னோடு கமல மலரான் காணாமை 
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட் 
குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும் 
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே. 

2-61-2133:
பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த 
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி 
மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத 
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே. 

2-61-2134:
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக் 
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான் 
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க் 
கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே. 

3-15-2954:
மந்திர மறையவை வான வரொடும் 
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை 
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய 
அந்தமு முதலுடை அடிக ளல்லரே. 

3-15-2955:
படையுடை மழுவினர் பாய்புலித் தோலின் 
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர் 
விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய 
சடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே. 

3-15-2956:
பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர் 
தோலொடு நுலிழை துதைந்த மார்பினர் 
மேலவர் பரவுவெண் காடு மேவிய 
ஆலம தமர்ந்தஎம் அடிக ளல்லரே. 

3-15-2957:
ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர்ப் புன்னையுந் 
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில் 
வேழம துரித்தவெண் காடு மேவிய 
யாழின திசையுடை இறைவ ரல்லரே. 

3-15-2958:
பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர் 
ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்மிறை 
வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய 
பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே. 

3-15-2959:
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும் 
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை 
விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய 
அண்ணலை அடிதொழ அல்ல லில்லையே. 

3-15-2960:
நயந்தவர்க் கருள்பல நல்கி இந்திரன் 
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல் 
வியந்தவர் பரவுவெண் காடு மேவிய 
பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே. 

3-15-2961:
மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடி 
தலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர் 
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய 
அலையுடைப் புனல்வைத்த அடிக ளல்லரே. 

3-15-2962:
ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த் 
தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார் 
வேடம துடையவெண் காடு மேவிய 
ஆடலை யமர்ந்தஎம் அடிக ளல்லரே. 

3-15-2963:
போதியர் பிண்டியர் பொருத்த மில்லிகள் 
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார் 
வேதியர் பரவுவெண் காடு மேவிய 
ஆதியை யடிதொழ அல்ல லில்லையே. 

3-15-2964:
நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன் 
செல்வன்எஞ் சிவனுறை திருவெண் காட்டின்மேற் 
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர் 
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே. 

5-49-5716:
அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பந்
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே. 

5-49-5717:
கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தௌ;ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே. 

5-49-5718:
ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் குந்தன் னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே. 

5-49-5719:
பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடந்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே. 

5-49-5720:
பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே. 

5-49-5721:
கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேஅடை நெஞ்சமே. 

5-49-5722:
தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன் புரித்த புன்சடை யான்கய வர்புரம் எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம் விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே. 

5-49-5723:
பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள் சிட்ட னாதியென் றுசிந்தை செய்யவே நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே. 

5-49-5724:
ஏன வேடத்தி னானும் பிரமனுந் தான வேடமுன் றாழ்ந்தறி கின்றிலா ஞான வேடன் விசயற் கருள்செய்யுங் கான வேடன்றன் வெண்கா டடைநெஞ்சே. 

5-49-5725:
பாலை யாடுவர் பன்மறை யோதுவர் சேலை யாடிய கண்ணுமை பங்கனார் வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு மாலை யாவது மாண்டவர் அங்கமே. 

5-49-5726:
இராவ ணஞ்செய மாமதி பற்றவை இராவ ணம்முடை யான்றனை யுள்குமின் இராவ ணன்றனை ய[ன்றி அருள்செய்த இராவ ணன்றிரு வெண்கா டடைமினே. 

6-35-6593:
தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

6-35-6594:
பாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி ய[ருண் டேறி
ஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

6-35-6595:
நென்னலையோர் ஓடேத்திப் பிச்சைக் கென்று 
வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி யாடும் 
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

6-35-6596:
ஆகத் துமையடக்கி ஆறு சூடி
ஐவா யரவசைத்தங் கானே றேறிப்
போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்
புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த 
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

6-35-6597:
கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங் 
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல 
உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
கள்ள விழிவிழிப்பார் காணாக் கண்ணாற்
கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

6-35-6598:
தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்
சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்
பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாராற்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக் 
கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

6-35-6599:
பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக்
கோள்நாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்
உண்பா ருறங்குவார் ஒவ்வா நங்காய்
உண்பதுவும் நஞ்சன்றே லோபி யுண்ணார்
பண்பா லவிர்சடையர் பற்றி நோக்கிப்
பாலைப் பரிசழியப் பேசு கின்றார்
விண்பால் மதிசூடி வேத மோதி
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

6-35-6600:
மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
வானவரும் மாலயனுங் கூடித் தங்கள்
சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்
தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்
கருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல்
என்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து
விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

6-35-6601:
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங் 
காணார் பொறியழலாய் நின்றான் றன்னை
உள்ளானை யொன்றலா உருவி னானை
உலகுக் கொருவிளக்காய் நின்றான் றன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும் 
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

6-35-6602:
மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி 
மாவேழம் வில்லா மதித்தான் றன்னை
நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் றன்னைக்
காக்குங் கடலிலங்கைக் கோமான் றன்னைக் 
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வு[ன்றி
வீக்கந் தவிர்த்த விரலார் போலும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே. 

7-6-7276:
படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் 
பாய்பு லித்தோல் அரையில் வீக்கி 
அடங்க லார்ஊர் எரியச் சீறி 
அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர் 
மடங்க லானைச் செற்று கந்தீர் 
மனைகள் தோறுந் தலைகை யேந்தி 
விடங்க ராகித் திரிவ தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே. 

7-6-7277:
இழித்து கந்தீர் முன்னை வேடம் 
இமைய வர்க்கும் உரைகள் பேணா 
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட 
உயர்த வத்தை அமரர் வேண்ட 
அழிக்க வந்த காம வேளை 
அவனு டைய தாதை காண 
விழித்து கந்த வெற்றி யென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே. 

7-6-7278:
படைகள் ஏந்திப் பாரி டமும் 
பாதம் போற்ற மாதும் நீரும் 
உடையோர் கோவ ணத்த ராகி 
உண்மை சொல்லீர் உம்மை யன்றே 
சடைகள் தாழக் கரணம் இட்டுத் 
தன்மை பேசி இல்ப லிக்கு 
விடைய தேறித் திரிவ தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே. 

7-6-7279:
பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர் 
பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர் 
கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக் 
கருது வார்கள் காணும் வண்ணம் 
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர் 
வான நாடர் மருவி யேத்த 
விண்ணு ளீராய் நிற்ப தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே. 

7-6-7280:
குடமெ டுத்து நீரும் பூவுங் 
கொண்டு தொண்டர் ஏவல் செய்ய 
நடமெ டுத்தொன் றாடிப் பாடி 
நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம் 
வடமெ டுத்த கொங்கை மாதோர் 
பாக மாக வார்க டல்வாய் 
விடம்மி டற்றில் வைத்த தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே. 

7-6-7281:
மாறு பட்ட வனத்த கத்தில் 
மருவ வந்த வன்க ளிற்றைப் 
பீறி இட்ட மாகப் போர்த்தீர் 
பெய்ப லிக்கென் றில்லந் தோறுங் 
கூறு பட்ட கொடியும் நீருங் 
குலாவி ஏற்றை அடர ஏறி 
வேறு பட்டுத் திரிவ தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே. 

7-6-7282:
காத லாலே கருதுந் தொண்டர் 
கார ணத்தீ ராகி நின்றே 
பூதம் பாடப் புரிந்து நட்டம் 
புவனி யேத்த ஆட வல்லீர் 
நீதி யாக ஏழி லோசை 
நித்த ராகிச் சித்தர் சூழ 
வேத மோதித் திரிவ தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே. 

7-6-7283:
குரவு கொன்றை மதியம் மத்தங் 
கொங்கை மாதர் கங்கை நாகம் 
விரவு கின்ற சடையு டையீர் 
விருத்த ரானீர் கருத்தில் உம்மைப் 
பரவும் என்மேல் பழிகள் போக்கீர் 
பாக மாய மங்கை யஞ்சி 
வெருவ வேழஞ் செற்ற தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே. 

7-6-7284:
மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர் 
நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற் 
பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர் 
பரவும் வண்ணம் எங்ங னேதான் 
நாடுங் காட்டில் அயனும் மாலும் 
நணுகா வண்ணம் அனலு மாய 
வேடங் காட்டித் திரிவ தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே. 

7-6-7285:
விரித்த வேதம் ஓத வல்லார் 
வேலை சூழ்வெண் காடு மேய 
விருத்த னாய வேதன் றன்னை 
விரிபொ ழிற்றிரு நாவ லூரன் 
அருத்தி யாலா ரூரன் தொண்டன் 
அடியன் கேட்ட மாலை பத்துந் 
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் 
செம்மை யாளர் வானு ளாரே.