ஆலயம் பற்றி :
தல வரலாறு
கோ - பசு, கர்ணம் - காது. சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களும் உண்டு.
இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவபிரான் உமையம்மையோடு காட்சித்தந்து வேண்டுவன யாது, என வினவினார். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான். அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராணலிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது; இச்சிவலிங்கத்தைத் தலையில் சுமந்து செல்லவேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். இராவணன் பிராணலிக்த்தைச் சிரவில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் பிரதிட்டை செய்துவிட்டால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழ கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவிவிட்டு, ஒரு சிறுவன் போல அவன்முன் தோன்றி நின்றார். இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்துச் சிறுநீர் கழித்து வருமளவும் அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த விநாயகர், இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமுறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்துவிடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராதரால் மூன்றுமுறை, அழைத்து சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்த அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர், உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருனி£ர்.
சிறப்புக்கள்
...திருசிற்றம்பலம்... |