HolyIndia.Org

திருமயிலை (சென்னை) , கபாலீஸ்வரர் ஆலயம்

கபாலீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருமயிலை (சென்னை)
இறைவன் பெயர் : கபாலீஸ்வரர்
இறைவி பெயர் : கற்பகாம்பாள்
எப்படிப் போவது : சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருமயிலை புறநகர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருமயிலை (சென்னை)
ஆலயம் பற்றி :

கோவில் அமைப்பு: கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்ட இவ்வாலயம் சென்னை நகரின் மையப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது. கிழக்கில் உள்ள கோபுரமே இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. ஒரு விசாலமான வெளிப் பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதைக் கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன் இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.

மேற்கு வேளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வடக்கு வேளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. இந்தப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார். தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது.

தல வரலாறு: திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒது குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து "மட்டிட்ட" என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள்.

சம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோவிலைப் பற்றியும், கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் பற்றியும் விபரமாக கூறப்படுகிறது. இவைகளை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்து போகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடுகிறார்.

...திருசிற்றம்பலம்...

திருமயிலை (சென்னை) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவான்மியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.53 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலிதாயம் (சென்னை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.40 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவொற்றியூர், சென்னை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.51 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேற்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.31 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.78 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கள்ளில் ( திருக்கண்டிலம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.13 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கச்சூர் ஆலக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 41.13 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 43.82 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 45.46 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெண்பாக்கம் (பூண்டி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 46.66 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.