HolyIndia.Org

திருமுதுகுன்றம் , பழமலைநாதர், விருத்தாசலேசர் ஆலயம்

பழமலைநாதர், விருத்தாசலேசர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருமுதுகுன்றம்
இறைவன் பெயர் : பழமலைநாதர், விருத்தாசலேசர்
இறைவி பெயர் : பெரியநாயகி, விருத்தாம்பிகை
எப்படிப் போவது : தேவாரப் பாடல்களில் திருமுதுகுன்றம் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 4 Km தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 Km.
சிவஸ்தலம் பெயர் : திருமுதுகுன்றம்
ஆலயம் பற்றி :

கோவில் அமைப்பு: திருமுதுகுன்றத்தில் உள்ள சிவாலயம் 4 புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் காண்போரைக் கவரும் விதமாக நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. ஆலயத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் இவ்வாலயத்தில் உள்ளன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது. முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. பாதாள விநாயகர் என்று அழைக்கப்படும் இவரை வணங்கினால் எல்லக் குறைகளும் நீங்கி நல்ல வாழ்வு அமையும் என்பதால் பக்தர்கள் இங்கு வந்து இவரை வணங்குகின்றனர். விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோவிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் நுழைந்தவுடன் தல விருட்சமான வன்னி மரம் உள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.

நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார்.

தலத்தின் சிறப்பு: இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உள்ளது. ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழாவும், மாசிமக திருவிழாவும் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

...திருசிற்றம்பலம்...

திருமுதுகுன்றம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.78 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.69 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநெல்வாயில் அரத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.53 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கூடலையாற்றூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.56 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாவலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.25 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.48 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 38.11 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 38.20 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 38.52 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடம்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 38.73 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.