ஆலயம் பற்றி : தேவர்களும் அசுரர்களும் பாற்க்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தை பருகிய பிறகு மீதமுள்ள பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அவர் அதை எடுத்துக் கொண்டு ஆகாய வழியாக செல்கையில் அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிரகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள இத்தலம் ஒரு கோளிலித் தலமாகும். ஆகையால் இங்குள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன. இவ்வாலயத்தில் உள்ள சுப்பிரமணிய விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். இத்தலம் குழகர்கோவில் என்றும் வழங்குகிறது....திருசிற்றம்பலம்... |