ஆலயம் பற்றி : கோவில் விபரங்கள் திருவாய்மூர் தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும். விடங்கருக்கு நீலவிடங்கர் என்று பெயர். நடனம் கமலநடனம். தியாகராஜர் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. ஐப்பசி மாதப் பிறப்பன்று நீலவிடங்கப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இத்தலம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஒரு 3 நிலை கோபுரத்துடனும் ஒரு பிரகாரத்துடனும் அமைந்துள்ளது. சூரியன் இங்கு இறைவனை வழிபட்டுள்ளார். நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவான் இத்தலத்து இறைவனைப் பூஜித்து துன்பம் நீங்கப் பெற்றுள்ளார் என்று தலப்புராணம் கூறுகிறது. பங்குனி மாதம் 12, 13 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். இங்கு சூரியனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் சூரிய தீர்த்தம். மேலும் இத்தலம் ஒரு கோளிலிங்கத் தலமாக விளங்குகிறது. இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரஹ தோஷங்கள் விலகும். இத்தலத்தில் 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர். ஆனால் இப்போது 7 தான் இருக்கின்றன.
திருநாவுக்கரசர் மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்க பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது தான் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும் ஆனால் சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக்கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும் போது இறைவன் அவர் கனவில் தோன்றி அசரீரியாக நான் திருவாய்மூரில் கோவில் கொண்டுள்ளேன் இங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்ட பின்சென்று திருவாய்மூர் அடைந்து இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். அவர் பாடிய பதிகத்தின் முதல் பாடல்:...திருசிற்றம்பலம்... |