ஆலயம் பற்றி : இக்கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. மேறகு நோக்கிய ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் மேறகு வெளிப் பிரகாரத்தில் நாம் காண்பது கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி. அதைத் தாண்டி உள் வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. அக்னிதேவன் வழிபட்ட தலமாதலால் திருகொள்ளிக்காடு என்றும் அக்னிதேவன் வழிபட்ட இறைவன் அக்னீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவனுக்கு உள்ள மற்றொரு பெயர் தீவண்ணநாதர். பெயருக்கு ஏற்றாற்போல் இங்குள்ள இறைவன் மேனி சற்று செவ்வொளி படர்ந்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் சந்நிதிக்கு முன்னால், இடப்பக்கத்தில் இறைவி பஞ்சினும் மெல்லடியம்மை சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் கருவறையின் கோஷ்டங்களில் பிரம்மா, அண்ணாமலையார், தட்சினாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகியோர் விளங்குகின்றனர்.
மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி தனி விமானம், தனி மண்டபத்துடன் உள்ளது. திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் விசேஷம். நளன் இத்தலத்தில் சனீஸ்வரரை வழிபட்டுள்ளான் என்ற சிறப்பு இடையது இச்சந்நிதி. புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான் என்பது பிரசித்தம். சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பொங்கு சனியாக காட்சி அளிப்பதால் அவர் அருள் வேண்டி பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் காட்சி தருவார்கள். ஆனால இவ்வாலயத்தில் "ப" வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி பருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு வேலையில்லை.
...திருசிற்றம்பலம்... |