ஆலயம் பற்றி : சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். அதுமட்டுமன்றி இறைவனுக்கு தினமும் மரத்தில் ஏறிப் பூ பறிபதற்காக பாம்பின் கால்களை வேண்டி வரமாகப் பெற்றவர். இவர் மதுரமான குரலினிமை பெற யாழினும் மென்மொழியாள் என்ற இறைவியையும், பதஞ்சலி மனோஹரர் என்ற சிவபெருமானின் லிங்கத் திருவுருவையும் ஏற்படுத்தி பூஜித்த தலம் தான் திருவிளமர்.
இறைவன் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கிறார். இத்தலத்தில் உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திரு உருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் சந்நிதியும் இக்கோவிலில் உள்ளது. கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. பைரவருக்கு தனி சந்நிதி இருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். பைரவரை தேய்பிறை, அஷ்டமி நாட்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். ...திருசிற்றம்பலம்... |