HolyIndia.Org

மயிலாடுதுறை , மயூரநாதர் ஆலயம்

மயூரநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : மயிலாடுதுறை
இறைவன் பெயர் : மயூரநாதர்
இறைவி பெயர் : அபயாம்பிகை, அஞ்சல்நாயகி
தல மரம் : மா, வன்னி.
தீர்த்தம் : பிரம தீர்த்தம், காவிரி, ரிஷப தீர்த்தம்
வழிபட்டோர்: இந்திரன், பிரமன், வியாழபகவான், அகத்தியர், சப்தமாதாக்கள்,உமாதேவி, அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு ஆகியோர்
எப்படிப் போவது : மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் : மயிலாடுதுறை
ஆலயம் பற்றி :

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு திருவெண்காடு திருவிடைமருதூர் திருவாஞ்சியம் திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும். சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர்.

ஒருமுறை கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் காவிரியின் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் - ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிக சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். மறுநாள் கார்த்திகை மாதத்தின் முதல் நாள் "முடவன் முழுக்கு" என்று கொண்டாடப்படுகிறது. துலா மாதத்தின் கடைமுக நாளான கடைசி நாளில் காவிரியில் நீராட உறுதியுடன் முடவன் ஒருவன் மாயூரம் நோக்கி வருகிறான். ஆனால அவனால் கடைமுகத்திற்கு மறுநாள் தான் மாயூரம் வரமுடிகிறது. அந்த முடவன் மனம் வருந்தி உள்ளம் உருக சிவபெருமானை வேண்ட, சிவனும் அவனுக்கு கடைமுகத்தன்று நீராடினால் கிடைக்கக் கூடிய மோட்சம் அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது.

கோவில் அமைப்பு: நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரத்திற்குத் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக் உள்ள கோவிலில் ஆதி மாயூரநதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.

தல வரலாறு அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும்; மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும்; இதனால் இத்தலம் "கௌரி மாயூரம்" என்றும் பெயர் பெற்றது. சிறப்புக்கள் ஆயிரம் ஆனால் மாயூரம் ஆகுமா? (மாயூரம் - மயிலாடுதுறை) என்னும் முதுமொழி இதன் சிறப்பை விளக்கும். காசிக்குச் சமமான ஆறுதலங்களுள் இதுவுமொன்று. சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம். கோயில் உட்சுற்றில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. நாடொறும் ஆறு கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது சிறப்புடையது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணம், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். கல்வெட்டில் இத்தல இறைவன் "மயிலாடுதுறை உடையார் " என்று குறிக்கப் பெறுகின்றார்.

...திருசிற்றம்பலம்...

மயிலாடுதுறை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவிளநகர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.79 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கிளியனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.68 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.43 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பறியலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.65 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.10 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.00 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசெம்பொன்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.34 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேள்விக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.47 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமணஞ்சேரி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.73 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவழுந்தூர் (தேரழுந்தூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.86 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.