HolyIndia.Org

திருவிடைமருதூர் , மஹாலிங்கேஸ்வரர் ஆலயம்

மஹாலிங்கேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவிடைமருதூர்
இறைவன் பெயர் : மஹாலிங்கேஸ்வரர்
இறைவி பெயர் : பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகி
தல மரம் : மருதமரம்
தீர்த்தம் : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர்: உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர், பிரமன், திருமால்.
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
சிவஸ்தலம் பெயர் : திருவிடைமருதூர்
ஆலயம் பற்றி :

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு 2. திருசாய்க்காடு (சாயாவனம் திருவெண்காடுதி ருவாஞ்சியம் மற்றும் மயிலாடுதுறைஆகும்.

திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய இக்கோவில் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அஸ்வமேதப் பிரகாரம்:
இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.
கொடுமுடிப் பிரகாரம்:
இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
ப்ரணவப் பிரகாரம்:
இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மூலவர் மஹாலிங்கேஸ்வரர் சந்நிதியின் நான்கு மூலைகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோரின் சந்நிதிகள் இருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள் திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன.

 • திருவலஞ்சுழி - விநாயகர்
 • சுவாமிமலை - முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)
 • திருவாரூர் சோமஸ்கந்தர்
 • சிதம்பரம் - நடராஜர்
 • ஆலங்குடி - தட்சினாமூர்த்தி
 • திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்
 • திருசேய்னலூர் - சண்டிகேஸ்வரர்
 • சீர்காழி - பைரவர்
 • சூரியனார்கோவில் - நவக்கிரகம்

தலத்தின் சிறப்பு: திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு

 • இத்தல விநாயகர் அருள்மிகு மகாலிங்கப் பெருமானைப் பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான் அருள்மிகு ஆண்ட விநாயகர் என்னுந் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.
 • அகத்திய முனிவர் முதலிய முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொத்த சிறப்புடைய இத்தலத்தில், அம்முனிவர்களின் பொருட்டு அருள்மிகு மகாலிங்கப்பெருமானைக் குறித்து, அம்பிகையானவள் மௌனத்துடன் மூகாம்பிகையாக இருந்து தவம் புரிய, பெருமான் சோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகைக்கும் முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தருளினார்.
 • பூசை விதிகளைத் தேவர்களுக்கு அறிவுறுத்தற் பொருட்டு பரமசிவன் தம்மைத்தாமே அர்ச்சித்துக் காட்சியருளினார்.
 • மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டுள்ள மூன்று தலங்களான திருப்பருப்பதம்(வடநாடு), சோழநாட்டுத் திருஇடைமருதூர் மற்றும் திருப்புடைமருதூர்(பாண்டியநாடு) ஆகியவற்றுள் இது இடையாக உள்ளது.
 • சிவ பரிவார மூர்த்தத் தலங்கள் யாவும் அருகே அமையப்பெற்றதால் இது மகாலிங்கத்தலம் எனப்படுகிறது. அவையாவன:
  1. விநாயகர்- திருவலஞ்சுழி,
  2. முருகர்- சுவாமி மலை,
  3. நடராஜர்-சிதம்பரம்,
  4. தட்சிணாமூர்த்தி-ஆலங்குடி,
  5. சண்டேச்சுரர்- திருசேய்ஞலூர்,
  6. பைரவர்-சீர்காழி,
  7. நவக்கிரகம்-சூரியனார் கோவில்
 • வரகுண பாண்டியனின் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்.

சிறப்புக்கள்

 • இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.
 • உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
 • இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.
 • இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
 • 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன.
 • இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.
 • இத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
 • இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர்.
 • கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் செய்த பலனை அடைவர்.
 • பிரணவத் திருச்சுற்றில் இப்போதும் நாதோற்பத்தி விளங்கி வரும் சிறப்புடையது; இத்திருச்சுற்றை வலம் வருவோர் மெஞ்ஞானம் பெற்றுச் சிறப்பர்.
 • இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் முதலானோர் பாடிப் பரவியுள்ளனர்.
 • பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்.
 • இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
 • மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.
 • பட்டிணத்தடிகளாரால் மும்மணிக்கோவை பாடப் பெற்றது.
 • இத்தலத்தில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்புடையது.
 • சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர்.
 • சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன.
...திருசிற்றம்பலம்...

திருவிடைமருதூர் அருகில் உள்ள சிவாலயங்கள்

 • திருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.71 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருவியலூர் (திருவிசைநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.76 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.15 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருநாகேஸ்வரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.49 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • சிவபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.76 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • தென்குரங்காடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.20 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • அரிசிற்கரைபுத்தூர் (அழகாபுத்தூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.68 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருநாரையூர் (சித்தீச்சரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.30 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருசேய்ஞலூர் (செங்கானூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.45 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருவைகன் மாடக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.68 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.