ஆலயம் பற்றி :
வடதளி: பழையாறை வடதளி என்று அழைக்கப்படுமிடம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது. ஊர் என்று சொல்லும் அளவிற்கு வீடுகள் அதிகம் இல்லை. சோழ மன்னன் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்றாக கருதப்படும் வடதளி கோவில் மிகவும் சிதிலமான நிலையில் காணப்படுகிறது. திருநாவுக்கரசர் இந்த வடதளிக்கு வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோவிலை மறைத்ததொடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருந்தார்கள். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கிவிடுகிறார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார். இக்கோவிலில் மூலவர் தர்மபுரீஸ்வரர் சந்நிதியும், அம்பாள் விமலநாயகி சந்நிதியும் தவிர வேறு பார்ப்பதற்கு குறிப்பாக ஒன்றும் இல்லை.
பழையாறை: வடதளியில் இருந்து திருமலைராயன் ஆற்றைக் கடந்து சென்றால் பழையாறை சோமேஸ்வரர் கோவில் வந்து அடையலாம். சோழர் காலத்து சிற்பப் பணிக்கு எடுத்துக் காட்டாக இக்கோவில் வாயில் சுவரும், சுவரில் உள்ள சிற்ப வடிவங்களும் அமைந்துள்ளன. இக்கோவிலும் வடதளி கோவிலைப் போன்றே மகவும் சிதிலமான நிலையில் இருக்கிறது. கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் அம்பாள் லோகாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்குள்ள படிக்கட்டுகளில் பிரகலாத சரித்திரச் சிற்பங்கள் செதுக்கபட்டிருகின்றன. உள் பிரகாரத்தில் நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் மூலவர் சோமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. அருகில் அர்த்த மண்டபத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
அப்பர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
தல வரலாறு
சிறப்புக்கள்
- சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம்.
- பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர்
இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.
- தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கின.
- இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம்
என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றது.
- பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக
வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.
- சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணாநோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் தலம்.
- மங்கையர்க்கரசியார், அமர்நீதி நாயனார் அகியோர் அவதரித்த பதி.
- மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை
வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக்
குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)
- இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது.
- இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது.
- குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.
- இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷ¤ணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது
சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.
...திருசிற்றம்பலம்... |