Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருச்சிராப்பள்ளி |
இறைவன் பெயர் : | தாயுமானவர் |
இறைவி பெயர் : | சுகந்த குந்தளாம்பிகை, மட்டுவார் குழலியம்மை |
தீர்த்தம் : | காவிரி |
வழிபட்டோர்: | பிரமன், இந்திரன் சடாயு, சப்தரிஷிகள், திரிசிரன், சாரமாமுனிவர், மௌனகுரு,தாயுமானவர் |
எப்படிப் போவது : | திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருச்சிராப்பள்ளி |
ஆலயம் பற்றி : திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்த ஆலயம் தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலையில் உள்ள பாறைகள் மீது மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இத்தலத்து இறைவன் தாயுமானசுவாமியை தரிசிக்க சுமார் 200 படிகள் ஏறினால் போதும். கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற இரண்டு குடவரைக் கோவில்கள் இங்கு உள்ளது. முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதியும், இரண்டாம் தளத்தில் இறைவன் தாயுமானசுவாமியின் சந்நிதியும் அமைந்துள்ளன. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் மேற்குப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது. தல வரலாறு: இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை.இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்ந்தியில் வாழைத்தாரைக் கட்டி அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக விநியோகிப்பார்கள். மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும கிட்டும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இத்தலத்தில் முருகப் பெருமான் குத்துக்குமாரசாமியாக பன்னிரு திருக்கரங்களும், ஆறு திருமுகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி, தெய்வசேனா தேவியர் இருபுறமும் விளங்குகின்றனர். மற்றொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவராவார். திருப்புகழில் 16 பாடல்கள் உள்ளன. தல வரலாறு தற்போது மக்களால் திருச்சிராப்பள்ளி, திருச்சி என்று வழங்குகிறது. எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார். திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது "திரிசிராப்பள்ளி " என்று பெயர் பெற்றது. சிறப்புக்கள் இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு. மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்; வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது. மலையின் உச்சியில் "பிள்ளையார் " (உச்சிப் பிள்ளையார்) உள்ளார். தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள். சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் பிராணம்) பாடியுள்ளார். ...திருசிற்றம்பலம்... |