HolyIndia.Org

கற்குடி (உய்யக் கொண்டான் மலை ) , உஜ்ஜீவனேஸ்வரர், ஜீவநாதர் ஆலயம்

உஜ்ஜீவனேஸ்வரர், ஜீவநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : கற்குடி (உய்யக் கொண்டான் மலை )
இறைவன் பெயர் : உஜ்ஜீவனேஸ்வரர், ஜீவநாதர்
இறைவி பெயர் : அஞ்சனாட்சி, பாலாம்பிகை
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : பொன்னொளி ஓடை, குடமுருட்டி(தஞ்சைஆறு அல்லஇது வேறு.), ஞானவாவி, எண்கோணதீர்த்தம், நாற்கோணதீர்த்தம் என்பன..
வழிபட்டோர்: கரன், நாரதர், உபமன்யு முனிவர், மார்க்கண்டேயர், அருணகிரிநாதர்
எப்படிப் போவது : திருச்சியில் இருந்து மேற்கே 5 கி.மி. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இத்தலம் அமைந்திருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : கற்குடி (உய்யக் கொண்டான் மலை )
ஆலயம் பற்றி :

தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் கற்குடி என்றும் தற்போது உய்யக்கொண்டான் மலை என்றும் வழங்கும் சிவஸ்தலம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. குன்றின் பாறைகளில் செதுக்கப்பட்ட 64 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம். இவ்வாலயம் 5 பிரகாரங்களுடனும் 4 புறமும் மதில் சூழ்ந்தும் அமைந்துள்ளது. மூலவர் உஜ்ஜீவனேஸ்வரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் வீற்றிருக்கிறார்.அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது. குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. இறைவன், இறைவி சந்நிதி தவிர பிரம்மா, துர்க்கை, பைரவர், மஹாலக்ஷ்மி, சக்திகணபதி, சூரியன், தட்சினாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. கோவிலின் உட்புறச் சுவர்களில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவில்லுக்கு பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான். இத்தலம் நந்திவர்ம மங்கலம் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தலம் பற்றிய புராணச் செய்தி: மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும் படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அவர் முன் தோன்றி உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்ட போது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும் போது மிருகண்டு முனிவர் அவனுடைய ஆயுள் விபரத்தைக் கூறி இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில் தான் இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் மார்க்கண்டேயனுக்குக் காட்சி கொடுத்து அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார்.

தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமையுடைய சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்திலிருந்து ஒரு பாடல்: -

மூத்தவனை வானவர்க்கும் மூவா மேனி
முதலவனை திருவரையின் மூர்க்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக
அணிந்தவனைப் பணிந்தடியார் அடைந்த அன்போ
டேத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு
இன்னமுதம் அளித்தவனை இடரை யெல்லாம்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தல வரலாறு தற்போது மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று வழங்குகிறது. இறைவன் கல்லில் - மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது. இத்தலத்தில்தான் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்து இறைவன் அருள் புரிந்தார். சிறப்புக்கள் நந்திவர்ம பல்லவ மன்னனால் அமைக்கப்பெற்ற கோயில்; இப்பகுதிக்கு "நந்திவர்ம மங்கலம் " என்னும் பெயருண்டு. இங்கே கரன் வழிபட்ட சிவலிங்கம் "இடர்காத்தார் " என்னும் பெயருடன் திகழ்கிறது. இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது, (தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு) சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது. கொடிமரத்தின் முன்பு, மார்க்கண்டேயனைக் காப்பதற்கு - எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டுநீங்கி வந்து நின்ற, சுவாமியின் - பாதம் உள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார். கல்வெட்டில் "நந்திவர்ம மங்கலம்", "ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம்" இவ்வூர் என்றும்; இறைவன் "உய்யக்கொண்டநாதர் " என்றும் குறிக்கப்படுகிறது. (கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது இக்கோயில் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியது என்ற செய்தியை "கெஜட்" வாயிலாக அறிகிறோம்.)

...திருசிற்றம்பலம்...

கற்குடி (உய்யக் கொண்டான் மலை ) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருமூக்கிச்சரம் (உறையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.26 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சிராப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.29 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவானைக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.57 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.35 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பைஞ்ஞீலி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.35 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெறும்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.09 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபாற்றுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.47 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பராய்த்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.60 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமாந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.35 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅன்பில் ஆலாந்துறை (அன்பில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.26 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.