HolyIndia.Org

திருவையாறு , ஐயாரப்பர், பஞ்சநாதேஸ்வரர் ஆலயம்

ஐயாரப்பர், பஞ்சநாதேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவையாறு
இறைவன் பெயர் : ஐயாரப்பர், பஞ்சநாதேஸ்வரர்
இறைவி பெயர் : தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சூரியபுட்கரணி, காவிரி.
வழிபட்டோர்: திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணண், வாலி, சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், அருணகிரிநாதர்
எப்படிப் போவது : திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருவையாறு
ஆலயம் பற்றி :

காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற 5 சிவஸ்தலங்கள் 1. திருவெண்காடு2. சாயாவனம்3. மயிலாடுதுறை4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்கோவில் அமைப்பு: திருவையாறு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும்.முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது. இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவக்க்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சினாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகைலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன.

இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர் ஏகாம்பரநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் ஆதலால் அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருவாரூர் ஆலய மூலவர் வன்மீகநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் என்பது குறிப்பிடதக்கது. இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.

இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசுசுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது.

இங்குள்ள தட்சினமூர்த்தி ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள தட்சினாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்) அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

அப்பர் கண்ட கைலாயம்: திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார். திருநாவுக்கரசரும்

தல வரலாறு ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப் பெயர் பெற்றது. சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.) நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது. இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன. அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம். சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி. இத் திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன. சிறப்புக்கள் சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது. நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. பிற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

...திருசிற்றம்பலம்...

திருவையாறு அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.08 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்டியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.16 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பெரும்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.45 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.86 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.62 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.44 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பூந்துருத்தி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.53 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாலம்பொழில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புள்ளமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.44 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்குடித்திட்டை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.81 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.