ஆலயம் பற்றி :
திருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் மன்மதனை எரித்த தலம். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் காரனமாக தேவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். மன்மதன் இறைவன் இருக்குமிடம் சென்று இறைவன் மீது காமபாணம் தொடுத்தான். காமன் தொடுத்த மலர்க்கணை இறைவனின் தவத்தை ஒரு கணம் சலனப்படுத்தியது. இறைவன் கோபமுற்று கண் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார்.
கோவில் விபரங்கள்: வீரட்டேஸ்வரர் ஆலயம் மேற்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகள் கொண்ட நுழைவாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் எதிரில் வெளியே இத்தலத்து தீர்த்தம் சூலகங்கை ஒரு தடாக வடிவில் அமைந்துள்ளது. கோபுர நுழைவாயில் உட்சென்று வலம் வந்து மகாமண்டபம் அடைந்தால் அதன் வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவி ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. இதனையடுத்து காமதகனமூர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. இதனுள் சிவபெருமான் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். இடது காலை மடித்துக் குத்திட்டு வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்துள்ளார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். சிவபெருமானின் இடப்புறம் அம்பிகை நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். இங்குள்ள சிவமூர்த்தம் நடைமுறையில் காமதகனமூர்த்தி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் ரதியின் வேண்டுகோளிற்கு இணங்கி மன்மதனை உயிர்ப்பித்து எழுப்பி இருவருக்கும் அருள் புரிந்த இடமே இத்தலம். இதையொட்டி இச்சந்நிதிக்கு நேர் எதிரில் ரதி மன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன. கருவறையில் மூலவர் வீரட்டேஸ்வரர் சதுரமான ஆவுடையார் மேல் லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் மன்மதன் சிவபெருமான் மேல் எய்த ஐவகை மலர்களும் குறிப்பாக தாமரை மலர் பதிந்திருப்பதைக் காணலாம். இத்தலத்து விநாயகர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தலமரம் கடுக்காய்.
அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார்.
தலம் பெயர் வரலாறு: புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். அவர் இத்தலத்தை அடைந்து அதுபோல் அபிஷேகம் செய்ய விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கை என்று வழங்கலாயிற்று.
சிறப்புக்கள்
- மன்மதனை எரித்தத் தலம்.
- யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்களாகும்.
- ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் காணத்தக்கது.
- கொடிமரமில்லை.
- காமனைத் தகனம் செய்த இடம் "விபூதிக்குட்டை " என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது; இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.
- குறுக்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது; இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
- நடராச சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச் சபை, "சம்பு விநோத சபை", "காமனங்கநாசனி சபை" எனப் பெயர் பெறும்.
- மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம்
சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.
- மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.
- சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்து 12 கி. மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டிச் செல்ல வேண்டும். மயிலாடுதுறை -
மணல்மேடு நகரப் பேருந்துகள் உள்ளன. வாகனங்களில் கோயில் வரை செல்லலாம்.
...திருசிற்றம்பலம்... |