HolyIndia.Org

திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) , வைத்தியநாதர் ஆலயம்

வைத்தியநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்)
இறைவன் பெயர் : வைத்தியநாதர்
இறைவி பெயர் : தையல்நாயகி
தல மரம் : வேம்பு
தீர்த்தம் : சித்தாமிர்த குளம்
வழிபட்டோர்: முருகர், சூரியன், ரிக் வேதம், அங்காரகன்(செவ்வாய்), இராமர், இலட்சுமணன், அநுமான், ஜடாயு, சம்பாதி, பிரம்மன், சரஸ்வதி, லட்சுமி, துர்கை , பரசர், துருவாசர்,சிவசன்மன் முதலியோர்.
எப்படிப் போவது : தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது வைத்தீஸ்வரன்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக 270 கி.மி. தொலைவில் இருக்கிறது. மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின்
சிவஸ்தலம் பெயர் : திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்)
ஆலயம் பற்றி :

தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன்கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.

கோவில் அமைப்பு: நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். இறைவி தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும். கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம். வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன.

இத்தலம் நவக்கிரக ஸ்தலங்களில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர். இத்தலம் ஒரு கோளிலித் தலம். இத்தலத்தில் நவகிரங்களுக்கு வலிமை இல்லை. நவகிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமிக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

பிற பாடல்கள் : அருணகிநாதர் அருளிய 14 திருப்புகழ் பாடல்களும், குமரகுருபரர், படிக்காசுத்தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப் புலவர், இராமலிங்க சுவாமிகள், தலபுராணம் இயற்றிய வடுகநாத தேசிகர் மற்றும் தருமையாதீன்ம 10 வது சந்நிதானம் இயற்றிய முத்துக்குமாரசாமி திருவருட்பா என்னும் நூல்களும், மூவர் அம்மானை முதலான இத்தலத்திற்கு உரியனவாகும்.

தல வரலாறு இத்தலத்தை புள்(ஜடாயு,சம்பாதி), ரிக் வேதம்(இருக்கு), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) வழிபட்டதால், இப் பெயர் பெற்றது. இறைவன் மருத்துவராய்(வைத்தியநாதர்) இருந்து அருள்பாலிக்கும் தலம். முருகப் பெருமான், செல்வ முத்துக் குமாரசுவாமி என்னும் நாமத்துடன், அருள்கின்ற தலம். சிறப்புக்கள் இத்தல இறைவனை வணங்குவோர் அங்காரக தோஷம் நீங்கப்பெறுவர். இத்தலத் தீர்த்தமான சித்தாமிர்தகுளம் நோய் நீக்கும் ஆற்றல் உடையது. நேத்திரப்பிடி சந்தனம், திருச்சாந்துருண்டை பிரசாதம் தருகிறார்கள். இதனை உண்பதால் எல்லாவிதமான நோய்களும் நீங்கும். பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப்பெருமான், தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், வில்வத்தடி மண்ணும் எடுத்துக்கொண்டு உடன் 4448 வியாதிகளையும் தீர்க்கின்ற இடம். தருமை ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டது.

...திருசிற்றம்பலம்...

திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.88 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.00 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.85 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • சீர்காழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.41 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.74 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.84 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.54 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • நீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.60 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.47 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குருகாவூர் வெள்ளடை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.11 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.