HolyIndia.Org

சீர்காழி , பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர் ஆலயம்

பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : சீர்காழி
இறைவன் பெயர் : பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்
இறைவி பெயர் : திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி
தல மரம் : பாரிஜாதம்
தீர்த்தம் : பிரமதீர்த்தம், காளி தீர்த்தம், சூலதீர்த்தம், னந்த தீர்த்தம், வைணவதீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழிதீர்த்தம், சங்கதீர்த்தம், ுக்கிரதீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்தியதீர்த்தம், கௌதமதீர்த்தம், வன்னி ீர்த்
வழிபட்டோர்: பிரமன், குரு பகவான், திருமால், சிபிச்சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமசமுனிவர், இராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேடன், வியாசமுனிவர், முருகப் பெருமான், சந்திரன்
எப்படிப் போவது : சீர்காழி நகரின் மையப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் : சீர்காழி
ஆலயம் பற்றி :

உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார். சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு தோணியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மா இறைவன் சிவபெருமானை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பித்ததால் சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், சட்டைநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

கோவிலின் அமைப்பு: சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலில் நுழைந்ததும், ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வ்பரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்க்ம் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்னத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது. கோவிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோவிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன. இந்த பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார்.கோவிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார். தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை. இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நொக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது. இந்தச் சட்டநாதர், முத்துச் சட்டநாதர் என்ற பெயரோடு, வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவ உருவில் காட்சி தருகிறார்.

சம்பந்தர் ஞானப்பால் உண்டது: 7-ம் நூற்றாண்டில் சைவம் தழைக்க திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் என்ற பெருமையை உடையது சீர்காழி என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம். சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார். "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம் இதுதான். இவர் சீர்காழி இறைவன் மேல் 67 பதிகங்கள் பாடியுள்ளார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா நடைபெறும். ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில், அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில், அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான்.

திருஞானசம்பந்தர் அவதரித்த இந்த சீர்காழியில் உள்ள இறைவனை பிரம்மா, முருகன், காளி, குரு, இந்திரன், சந்திரன், சூரியன், வியாச முனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய முதல் பதிகத்தின் முதல் பாடல் கீழே:

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
தல வரலாறு திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த பதி.ஞானப்பால் அருந்திப் பாடிய பதி. இதற்குப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு. பிரமபுரம்-பிரமன் வழிபட்டதால் இப் பெயர். வேணுபுரம்-இறைவன் மூங்கில் வடிவில்(வேணு-மூங்கில்) தோன்றினான். புகலி-சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது. வெங்குரு-குரு பகவான் வழிபட்டது. தோணிபுரம்-பிரளயகாலத்தில் இப் பதி தோணியாய் மிதந்ததால் இப் பெயர்.பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சித் தந்ததால் இப் பெயர். பூந்தராய்-பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி(திருமால்) வழிபட்டது. சிரபுரம்-சிரசின்(தலை)கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது. புறவம்-புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச்சக்கரவர்த்தி பேறு பெற்றது. சண்பை-சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த குலத்தோரால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான்(திருமால்) வழிபட்டது. சீகாளி(ஸ்ரீகாளி)-காளிதேவி,சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வறம் நீங்க , வழிபட்டது. கொச்சைவயம்-மச்சகந்தியைக் கூடிய கொச்சை(பழிச்சொல்) நீங்கப் பராசரர் வழிபட்டது. கழுமலம்-மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது. குரு,இலிங்க,சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீஸ்வரர் இலிங்கமாகவும்,ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது.ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும்,பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து,சிவஞானச்செல்வத் தை அளிப்பதற்குக் குருவடிவமாயும்,பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கமவடிவாயும் ,இறைவன் உள்ளார். சட்டைநாத சுவாமி இங்கு முக்கிய தெய்வமாகும்.இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து,அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால்,இப் பெயர். சிறப்புக்கள் நாவுக்கரசர், சம்பந்தரின் நட்பைப் பெற்று,அவரால் அப்பர் எனப் பெயரும் பெற்றப் பதி. சுந்தரர் இங்கு வந்தபோது,இது,சம்பந்தப் பெருமான் அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, இறைவர் காட்சி தந்த பதி. திருநீலகண்ட யாழ்ப்பாணர்,சம்பந்தரை வணங்கி,அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமைப் பெற்ற பதி. கணநாத நாயனார் அவதரித்தத் திருப்பதி. பிற்கால சோழ,பல்லவ,விஜயநகர கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளது. பட்டினத்து அடிகள் மும்மணிக்கோவை இயற்றியுள்ளார். இது பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. இது, தருமைபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது. சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. ...திருசிற்றம்பலம்...

சீர்காழி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.83 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குருகாவூர் வெள்ளடை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.60 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.41 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.59 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.77 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • கீழை திருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.53 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.55 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.77 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.29 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெண்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.38 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.