HolyIndia.Org

திருவெண்காடு , சுவேதாரன்யேஸ்வரர் ஆலயம்

சுவேதாரன்யேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவெண்காடு
இறைவன் பெயர் : சுவேதாரன்யேஸ்வரர்
இறைவி பெயர் : பிரம்மவித்யா நாயகி
தல மரம் : ஆலமரம், அரசு, கொன்றை
தீர்த்தம் : அக்கினி,சூரிய, சந்திர தீர்த்தங்கள்
வழிபட்டோர்: பிரம்மன், இந்திரன், வெள்ளையானை
எப்படிப் போவது : சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருவெண்காடு சிவஸ்தலம் இருக்கிறது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. நவக்கிரஹ ஸ்தலங்களில் திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்குகிறது.
சிவஸ்தலம் பெயர் : திருவெண்காடு
ஆலயம் பற்றி :

தல வரலாறு இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சிகொடுத்து சூலத்தைத்தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப்போயிற்று. இஃதறிந்த இறைவன் தாமே அகோரமூர்த்தியாக (இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியாக அகோரமூர்த்தியே உள்ளார்.) வடிவுகொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்த (மாசி மகத்து மறுநாள்) நாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு திருசாய்க்காடு (சாயாவனம்) திருவிடைமருதூர் திருவாஞ்சியம் மற்றும் 5மயிலாடுதுறை ஆகும். சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோவில் உள்ளே நான்கு பிரகாரங்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் இராஜ கோபுரங்கள் உண்டு. வெளிப் பிரகாரத்திலிருந்து உள்ளே செல்ல இரு கூடகோபுரங்கள் இருக்கின்றன.சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் பல தானங்களைச் இக்கோவிலுக்கு செய்திருப்பது தெரிய வருகிறது. ஆதிசிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு ஸ்தலத்திற்கு உண்டு. மூலவர் சுயம்பு வடிவானவர். இங்கும் சிதம்பரம் போன்றெ நடராஜர் சபை, ஸ்படிக லிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் 4 முறை அபிஷேகமும் நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறையும் அபிஷேகம் நடைபெறுகின்றன. மேலும் இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே போன்று இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராஜர் சபைக்கு அருகில் மஹாவிஷ்னுவின் சந்நிதி இருக்கிறது.

இங்குள்ள அகோரமூர்த்தி இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு பெற்றவர். பிரம்மாவிடம் பெற்ற வரங்கள் காரணமாக மருத்துவன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியதனால் அவர்கள் திருவெண்காடு வந்து தங்கி இருந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து மேலும் தேவர்களுக்கு துன்பத்தைத் தர ரிஷபதேவர் அசுரனுடன் தேவர்களைக் காப்பாற்ற போரிட்டார். ரிஷபதேவர் போரில் காயப்பட, சிவபெருமான் கோபமுற்று அவருடைய 5 முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோரமூர்த்தியைக் கண்டவுடன் அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்தான். இந்த அகோரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமை இரவில் வழிபடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள மூர்த்திகள் மூன்று - நடராஜர், திருவெண்காடர், அகோரமூர்த்தி
இத்தலத்தில் உள்ள சக்திகள் மூன்று - பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை
இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம்
இத்தலத்தில் உள்ள தலவிருட்சங்கள் மூன்று - வடவால், வில்வம், கொன்றை.

இக்கோவிலில் உள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதம் இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த தலங்களில் திருவெண்காடு தலமும் முக்கியமான ஒன்றாகும்.

நவக்கிரஹ ஸ்தலம்: திருவெண்காடு நவக்கிரஹங்களில் புதனுக்கு உரிய ஸ்தலமாகும். அம்பாள் பிரம்ம வித்யா நாயகியின் கோவிலுக்கு இடது பக்கத்தில் தனி சந்நிதியில் புத பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புத பகவானை வழிபட்டால் உடலில் உள்ள நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குதல், கல்வி மேன்மை, நா வன்மை, செய்யும் தொழில் சிறப்பு ஆகிய நலன்கள் உண்டாகும்.

நன்மக்கட்பேறு பெற: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம் என்னும் முக்குளங்களிலும் நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகங்கள் ஒன்றின் 2வது பாடலில் இதை குறிப்பிடுகிறார்.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு
  ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
  தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே

சிறப்புக்கள்

  • அச்சுத களப்பாளர்மூலமாக மெய்கண்டார் அவதாரத்தை நாட்டுக்களித்து நலம் செய்த முக்குளநீர் உள்ள பதி.

  • இத்தலம் மூன்று மூர்த்திகள், மூன்று அம்பிகைகள், மூன்று தல மரங்கள், மூன்று தீர்த்தங்கள் (முறையே சுவேதாரண்யர், அகோரர், நடராசர்; பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி; வட ஆலமரம், கொன்றை, வில்வம்; சூரிய, சந்திர, அக்கினி) ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
  • இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டு முக்குளநீர்) நீராடி இறைவனை வழிபடின் நினைத்த செயல் கைகூடும் என்பது ஞானசம்பந்தர் அமுதவாக்கு.
  • "சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ." என்று ஒரு தாலாட்டுப் பாட்டும் இத்தல முக்குளச் சிறப்பை விளக்குகின்றது.
  • இத்தலம் புதனுக்குரிய தலமாதலின், புதனை வலம் வந்து வழபட்ட பின்னரே இங்கு தரிசனம் பூர்த்தியாகும்; புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது.
  • இங்கு சந்திரன் வழிபட்ட லிங்கம் உள்ளது.
  • அகோரமூர்த்தியின் மூல மற்றும் உற்சவ திருமேனிகள் அற்புத வேலைபாடமைந்துள்ளன; காணத்தெவிட்டாத கலையழகு.
  • நடராசசபை தில்லையைப்போலச் செப்பறையில் அமைந்துள்ளது; உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தில்லையைப்போலவே நாடொறும் அபிஷேகம் நடைபெறுகிறது. சிதம்பர இரகசியமும் உள்ளது.
  • துர்க்கை இங்கு மேற்கு நோக்கியிருப்பது விசேஷமானது. திருமணமாகாதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொள்வது மரபாக இருந்து வருகின்றது.
  • மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன.
  • நாடொறும் ஆறுகால வழிபாடுகள்; சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாகமத்தின்படியும், அகோர மூர்த்திக்கு காரணாகமத்தின்படியும், நடராசப்பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுன்றன.
...திருசிற்றம்பலம்...

திருவெண்காடு அருகில் உள்ள சிவாலயங்கள்

  • கீழை திருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.35 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசாய்க்காடு (சாயாவனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.45 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபல்லவனீச்சுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.85 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.13 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.28 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதலைச்சங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.18 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.85 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்திருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.09 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குருகாவூர் வெள்ளடை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.22 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆக்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.44 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.