1566
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே 
1567
சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத் துளார்க்குவகுத்துவைத் தானே 
1568
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே 
1569
ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே 
1570
ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே