HolyIndia.Org

திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) ஆலய தேவாரம்

திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) ஆலயம்
3-36-3181:
சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம் 
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் 
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி 
எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே. 

3-36-3182:
ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ் 
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே 
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி 
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே. 

3-36-3183:
கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி 
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில் 
ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ 
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே. 

3-36-3184:
கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும் 
அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி 
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை 
விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே. 

3-36-3185:
வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே 
திரைதரு முகலியின் கரையினில் தேமலர் 
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன் 
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே. 

3-36-3186:
முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும் 
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக் 
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய 
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே. 

3-36-3187:
மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி 
நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர் 
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா 
அண்ணலார் காளத்தி ஆங்கணைந் துய்ம்மினே. 

3-36-3188:
வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப் 
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின் 
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர 
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே. 

3-36-3189:
அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி 
வட்டவார் சடையனை வயலணி காழியான் 
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல் 
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே. 

3-69-3537:
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந்
தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்
ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற்
கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே. 

3-69-3538:
முதுசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள் சிதறஎழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிகள் இருளகல நிலவுகா ளத்திமலையே. 

3-69-3539:
வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாருகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
பல்பல இருங்கனி மூபருங்கிமிக வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே. 
( மூ பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது.) 

3-69-3540:
வேயனைய தோளுமையோர் பாகமது வாகவிடை யேறிசடைமேற்
தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல ராகுநயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே. 

3-69-3541:
மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபோலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி யிழியவயல் நிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே. 

3-69-3542:
பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றஅரன் மலையைவினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்தவிறகிற்
காரகில் இரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே. 

3-69-3543:
ஆருமெதி ராதவலி யாகியச லந்தரனை ஆழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன் இருந்தமலை தன்னைவினவில்
ஊரும்அர வம்மொளிகொள் மாமணியு மிழ்ந்தவையு லாவிவரலாற்
காரிருள் கடிந்துகன கம்மெனவி ளங்குகா ளத்திமலையே. 

3-69-3544:
எரியனைய சுரிமயிர் இராவணனை யீடழிய எழில்கொள்விரலாற்
பெரியவரை ய[ன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடுவரை ய[டுவரலாற்
கரியினொடு வரியுழுவை அரியினமும் வெருவுகா ளத்திமலையே. 

3-69-3545:
இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென இகலுமிருவர்
தனதுருவம் அறிவரிய சகலசிவன் மேவுமலை தன்னைவினவிற்
புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரும ணம்புணரும்நாள்
கனகமென மலர்களணி வேங்கைகள் நிலாவுகா ளத்திமலையே. 

3-69-3546:
நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவிற்
குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே. 

3-69-3547:
காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைகள் நீடுவளர் கொச்சைவயம் மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்கள் நல்லர்பர லோகமெளிதே. 

6-8-6319:
விற்று{ணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்று{ணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்று{ண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்று{ண்காண் காளத்தி காணப் பட்ட 
கணநாதன் காணவனென் கண்ணு ளானே. 

6-8-6320:
இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 

6-8-6321:
நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவா யன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட 
கணநாதன் காணவனென் கண்ணு ளானே. 

6-8-6322:
செற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண்
திருவொற்றி ய[ரான்காண் சிந்தை செய்வார்க்
குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்
சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண் காளத்தி காணப் பட்ட 
கணநாதன் காணவனென் கண்ணு ளானே. 

6-8-6323:
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 

6-8-6324:
எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்
நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு
நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 

6-8-6325:
கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 

6-8-6326:
இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண் 
வெண்ணூ லுஞ்சேர்ந்த அகலத் தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபா லிகான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 

6-8-6327:
தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க
ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்
நம்பன்காண் ஞானத் தொளியா னான்காண்
வானப்பே ரூரு மறிய வோடி 
மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக்
கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 

6-8-6328:
இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்
குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
மறைக்காட் டுறையும் மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 

6-8-6329:
உண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம் 
அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே. 

7-26-7483:
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே 
வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே 
கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய் 
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. 

7-26-7484:
இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே 
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய் 
உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள் 
அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. 

7-26-7485:
படையார் வெண்மழுவா பகலோன்பல் லுகுத்தவனே 
விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய் 
கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய் 
உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே. 

7-26-7486:
மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே 
குறியே என்னுடைய குருவேயுன்குற் றேவல்செய்வேன் 
நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள் 
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. 

7-26-7487:
செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி 
நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினாற் 
துஞ்சேன் நானொருகாற் றொழுதேன்றிருக் காளத்தியாய் 
அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. 

7-26-7488:
பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றறியேன் 
செய்யவ னாகிவந்திங் கிடரானவை தீர்த்தவனே 
மெய்யவ னேதிருவே விளங்குந்திருக் காளத்தியென் 
ஐயநுன் றன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. 

7-26-7489:
கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதவென்னுள் 
குடியாக் கோயில்கொண்ட குளிர்வார்சடை யெங்குழகா 
முடியால் வானவர்கள் முயங்குந்திருக் காளத்தியாய் 
அடியேன் உன்னையல்லால் அறியேன்மற் றொருவரையே. 

7-26-7490:
நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக் 
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே 
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய் 
ஏறே உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே. 

7-26-7491:
தளிர்போல் மெல்லடியாள் தனைஆகத் தமர்ந்தருளி 
எளிவாய் வந்தென்னுள்ளம் புகுதவல்ல எம்பெருமான் 
களியார் வண்டறையுந் திருக்காளத்தி யுள்ளிருந்த 
ஒளியே உன்னையல்லால் இனியொன்றும் உணரேனே. 

7-26-7492:
காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள் 
ஆரா வின்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன 
சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப் 
பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே.