திருமாகறல் ஆலய தேவாரம்
திருமாகறல் ஆலயம்3-72-3570:
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.
3-72-3571:
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.
3-72-3572:
காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.
3-72-3573:
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.
3-72-3574:
துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.
3-72-3575:
மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.
3-72-3576:
வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.
3-72-3577:
தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.
3-72-3578:
தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.
3-72-3579:
காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை ய[ர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.
3-72-3580:
கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.