HolyIndia.Org

கச்சி அநேகதங்காபதம் ஆலய தேவாரம்

கச்சி அநேகதங்காபதம் ஆலயம்
7-10-7318:
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு 
மானதி டந்திகழ் ஐங்கணையக் 
கோனை யெரித்தெரி யாடி இடங்குல 
வான திடங்குறை யாமறையாம் 
மானை இடத்ததோர் கையனி டம்மத 
மாறு படப்பொழி யும்மலைபோல் 
யானை யுரித்த பிரான திடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே. 

7-10-7319:
கூறு நடைக்குழி கட்பகு வாயன 
பேயுகந் தாடநின் றோரியிட 
வேறு படக்குட கத்திலை யம்பல 
வாணன்நின் றாடல் விரும்புமிடம் 
ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை 
யோர்பெரு மான்உமை யாள்கணவன் 
ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே. 

7-10-7320:
கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி 
லாலுமி டம்மழு வாளுடைய 
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக் 
கண்டனி டம்பிறைத் துண்டமுடிச் 
செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு 
வாகுமி டந்திரு மார்பகலத் 
தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே. 

7-10-7321:
கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங் 
கங்கையுந் திங்களுஞ் சூடுசடை 
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப் 
பங்கினிற் றங்க உவந்தருள்செய் 
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள் 
பாய வியாத்தழல் போலுடைத்தம் 
அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே. 

7-10-7322:
பைத்த படத்தலை ஆடர வம்பயில் 
கின்ற இடம்பயி லப்புகுவார் 
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ் 
கின்ற இடந்திரு வானடிக்கே 
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள 
வைத்த இடம்மழு வாளுடைய 
அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே. 

7-10-7323:
தண்ட முடைத்தரு மன்தமர் என்றம 
ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம் 
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று 
நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம் 
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த 
பிரான திடங்கடல் ஏழுகடந் 
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே. 

7-10-7324:
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு 
தேத்து மிடங்கதி ரோன்ஒளியால் 
விட்ட இடம்விடை ய[ர்தி யிடங்குயிற் 
பேடைதன் சேவலோ டாடுமிடம் 
மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு 
மாதவி யோடு மணம்புணரும் 
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே. 

7-10-7325:
புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர் 
தம்புர மூன்றும் பொடிப்படுத்த 
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங் 
காலனைக் கால்கொடு வீந்தவியக் 
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல் 
குராவகு ளங்குருக் கத்திபுன்னை 
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே. 

7-10-7326:
சங்கை யவர்புணர் தற்கரி யான்றள 
வேனகை யாள்தவி ராமிகுசீர் 
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை 
நட்டம்நின் றாடிய சங்கரனெம் 
அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல் 
சேரொளி யன்னதோர் பேரகலத் 
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே. 

7-10-7327:
வீடு பெறப்பல ஊழிகள் நின்று 
நினைக்கும் இடம்வினை தீருமிடம் 
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு 
மேவினர் தங்களைக் காக்குமிடம் 
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன் 
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார் 
கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே.