திருநாவலூர் ஆலய தேவாரம்
திருநாவலூர் ஆலயம்7-17-7391:
கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரந் தீயெழு
வித்தவன் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை யாளுங்கொண்ட
நாவல னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
7-17-7392:
தன்மையி னாலடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
7-17-7393:
வேகங்கொண் டோ டிய வெள்விடை
ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்மூகடற் கோடியின்
மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
மூகடற்கோடி என்பது கோடிக்குழகரென்னுந்தலம்.மோடி என்பது
அங்குக் கோயில் கொண்டிருக்கும் துர்க்கை.
7-17-7394:
அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்
சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத்
தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
7-17-7395:
உம்பரார் கோனைத்திண் டோ ள்முரித்
தாருரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றரோர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
7-17-7396:
கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்
கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்
பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
7-17-7397:
தாயவ ளாய்த்தந்தை யாகிச்
சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக்
கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
7-17-7398:
வாயாடி மாமறை ஓதியோர்
வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்
பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
7-17-7399:
படமாடு பாம்பணை யானுக்கும்
பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும்
பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
7-17-7400:
மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
வெண்ணெய[ர் ஆளுங்கொண்டார்
தடுக்கவொண் ணாததோர் வேழத்தி
னையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.
7-17-7401:
நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனா
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே.