திருவேடகம் ஆலய தேவாரம்
திருவேடகம் ஆலயம்3-32-3140:
வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.
3-32-3141:
கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்
தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால்
இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே.
3-32-3142:
குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனுர் ஏடகங்
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.
3-32-3143:
ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில்பெறுங்
கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடஞ்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகஞ்
சீலமார் ஏடகஞ் சேர்தலாஞ் செல்வமே.
3-32-3144:
வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக்
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.
3-32-3145:
பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்
தையனை அடிபணிந் தரற்றுமின் அடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.
3-32-3146:
தடவரை யெடுத்தவன் தருக்கிறத் தோளடர்
படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.
3-32-3147:
பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
அன்னமாம் அயனுமா லடிமுடி தேடியும்
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.
3-32-3148:
குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத் தெந்தையே.
3-32-3149:
கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை
நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.