திருஆப்பனூர் ஆலய தேவாரம்
திருஆப்பனூர் ஆலயம்1-88-948:
முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்ப னுரானைப்
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1-88-949:
குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னுரானைப்
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1-88-950:
முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னுரானைப்
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1-88-951:
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை அணியாப்ப னுரானைப்
பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1-88-952:
தகர மணியருவித் தடமால்வரை சிலையா
நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னுரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1-88-953:
ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை அணியாப்ப னுரானைப்
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1-88-954:
இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை எழிலாப்ப னுரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1-88-955:
கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னுரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
1-88-956:
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னுரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.
1-88-957:
செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னுரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.
1-88-958:
அந்தண் புனல்வைகை அணியாப்ப னுர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.