திருநாட்டியாத்தான்குடி ஆலய தேவாரம்
திருநாட்டியாத்தான்குடி ஆலயம்7-15-7370:
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன்
புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்
பிறவே னாகிலும் மறவேன்
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற்
கருதீ ராகிலுங் கருதி
நானே லும்மடி பாடுதல் ஒழியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.
7-15-7371:
கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்
டெல்லியில் ஆடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை
சொல்லாய் திப்பிய மூர்த்தி
வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல
மணியே மாணிக்க வண்ணா
நச்சேன் ஒருவரை நானுமை யல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.
7-15-7372:
அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன்
யாதினுக் காசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
பங்கா எம்பர மேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ
நாட்டியத் தான்குடி நம்பீ.
7-15-7373:
கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை
கல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுமக் கல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.
7-15-7374:
மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்
கருதா தார்தமைக் கருதேன்
ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன்
உம்மடி யடைந்தவர்க் கடிமைப்
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்
பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.
7-15-7375:
படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்
படுத்தா யென்றல்லல் பறையேன்
குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே
கோனே கூற்றுதைத் தானே
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும்
மறையோ தீமங்கை பங்கா
நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே
நாட்டியத் தான்குடி நம்பீ.
7-15-7376:
ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர
நினைந்தேன் உள்ளமுள் ளளவும்
உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன்
உகவீ ராகிலும் உகப்பன்
நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.
7-15-7377:
கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக்
கருதிடிற் கண்கணீர் பில்கும்
பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன்
பசுவே ஏறிலும் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்
மாட்டேன் மறுமையை நினையேன்
நலியேன் ஒருவரை நானுமை யல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.
7-15-7378:
குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்
கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயற் றண்டலை வேலி
நாட்டியத் தான்குடி நம்பீ.
7-15-7379:
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர்
பாடநும் பாவம்பற் றறுமே.