HolyIndia.Org

திருச்சாத்தமங்கை ஆலய தேவாரம்

திருச்சாத்தமங்கை ஆலயம்
3-58-3416:
திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர் 
இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றே 
பெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை 
அருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3417:
பொடிதனைப் பூசுமார்பிற் புரிநுலொரு பாற்பொருந்தக் 
கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே 
கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை 
அடிகள்நக் கன்பரவ அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3418:
நுனலந் தங்குமார்பில் நுகர்நீறணிந் தேறதேறி 
மானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவே 
தானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கை 
ஆனலந் தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3419:
மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசி 
புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவே 
கற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம் 
அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3420:
வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன் 
பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவே 
சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை 
அந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3421:
வேதமாய் வேள்வியாகி விளங்கும்பொருள் வீடதாகிச் 
சோதியாய் மங்கைபாகந் நிலைதான்சொல்ல லாவதொன்றே 
சாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கை 
ஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3422:
இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி 
உமையையோர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றே 
சமயமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை 
அமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3423:
பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி 
விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே 
தண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை 
அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3424:
பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணோர்பாகம் 
ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றே 
காரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணா 
ஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3425:
கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும் 
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே 
சங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கை 
அங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே. 

3-58-3426:
மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும் 
நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர் 
அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும் 
முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.