திருக்கருக்குடி (மருதாநல்லூர் ) ஆலய தேவாரம்
திருக்கருக்குடி (மருதாநல்லூர் ) ஆலயம்3-21-3020:
நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளி
நினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்
கனைகடல் வையகந் தொழு கருக்குடி
அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.
3-21-3021:
வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
காதியல் குழையினன் கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.
3-21-3022:
மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை யாட லென்கொலோ.
3-21-3023:
ஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர்
கானிடை யாடலான் பயில் கருக்குடிக்
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.
3-21-3024:
சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி
பாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.
3-21-3025:
இன்புடை யாரிசை வீணை பூணரா
என்புடை யாரெழில் மேனி மேலெரி
முன்புடை யார்முத லேத்தும் அன்பருக்
கன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே.
3-21-3026:
காலமும் ஞாயிறுந் தீயு மாயவர்
கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திருக் கருக்குடிச்
சாலவும் இனிதவ ருடைய தன்மையே.
3-21-3027:
எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.
3-21-3028:
பூமனுந் திசைமுகன் தானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
ஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடி
நாமன னினில்வர நினைதல் நன்மையே.
3-21-3029:
சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய வுரைகொளேல் அருந் திருந்நமக்
காக்கிய அரனுறை யணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.
3-21-3030:
கானலில் விரைமலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க் குயரும் இன்பமே.