திருக்கருவிலி கொட்டிட்டை (கருவேலி) ஆலய தேவாரம்
திருக்கருவிலி கொட்டிட்டை (கருவேலி) ஆலயம்5-69-5918:
மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.
5-69-5919:
ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5-69-5920:
பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5-69-5921:
வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்
வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
காட னாருறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5-69-5922:
உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்
கையி னானுறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5-69-5923:
ஆற்ற வும்மவ லத்தழுந் தாதுநீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.
5-69-5924:
நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே று{ர்பவன் கொட்டிட்டை சேர்மினே.
5-69-5925:
பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக்
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே.
5-69-5926:
நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே
கம்ப னாருறை கின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.
5-69-5927:
பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.