சிறுகுடி ஆலய தேவாரம்
சிறுகுடி ஆலயம்3-97-3842:
திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
படமலி அரவுடை யீரே
படமலி அரவுடை யீருமைப் பணிபவர்
அடைவதும் அமருல கதுவே.
3-97-3843:
சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவர் உறுபிணி யிலரே.
3-97-3844:
தௌ;ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
உள்ளுதல் செயநலம் உறுமே.
3-97-3845:
செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னலம் உடையவர் தொண்டே.
3-97-3846:
செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவர் அருவினை யிலரே.
3-97-3847:
செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை இடமுடை யீரே
மங்கையை இடமுடை யீருமை வாழ்த்துவார்
சங்கைய திலர்நலர் தவமே.
3-97-3848:
செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோருயர்ந் தோரே.
3-97-3849:
திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரநெரித் தீரே
தசமுகன் உரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறும் அதுவழி பாடே.
3-97-3850:
செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய் தீரே
இருவரை அசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவினை யொடுதுய ரிலரே.
3-97-3851:
செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரோ டமண்புறத் தீரே
புத்தரோ டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.
3-97-3852:
தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.