திருத்திலதைப்பதி ( செதலபதி) ஆலய தேவாரம்
திருத்திலதைப்பதி ( செதலபதி) ஆலயம்2-118-2747:
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்
கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே.
2-118-2748:
தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந்
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே.
2-118-2749:
அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந்
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே.
2-118-2750:
கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே.
2-118-2751:
புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டிய[ர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே.
2-118-2752:
விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே.
2-118-2753:
ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே.
2-118-2754:
கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே.
2-118-2755:
படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை
இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந்
திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே.
2-118-2756:
புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே.
2-118-2757:
மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்
கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்
பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே.