திருத்துருத்தி ( குத்தாலம்) ஆலய தேவாரம்
திருத்துருத்தி ( குத்தாலம்) ஆலயம்2-98-2528:
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.
2-98-2529:
அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளந்
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே.
2-98-2530:
கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநுல் உருத்திரா துருத்திபுக்
கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.
2-98-2531:
கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய்
இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே.
2-98-2532:
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்
டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.
2-98-2533:
வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ
வெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே.
2-98-2534:
கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்
மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே.
2-98-2535:
சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய்
கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை
அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே.
2-98-2536:
களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.
2-98-2537:
புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந்
துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.
2-98-2538:
கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே.
4-42-4572:
பொருத்திய குரம்பை தன்னைப்
பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் போதும் நெஞ்சுள்
இறைவனை ஏத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்
கொருத்தியைச் சடையில் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4-42-4573:
சவைதனைச் செய்து வாழ்வான்
சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல
இறைவனை ஏத்து மின்னோ
அவைபுர மூன்றும் எய்தும்
அடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4-42-4574:
உன்னியெப் போதும் நெஞ்சுள்
ஒருவனை ஏத்து மின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக்
கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள்
பூம்புனல் பொலிந்து தோன்றுந்
துன்னிய துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4-42-4575:
ஊன்றலை வலிய னாகி
உலகத்துள் உயிர்கட் கெல்லாந்
தான்றலைப் பட்டு நின்று
சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி
வானவர்க் கிறைவா வென்னுந்
தோன்றலைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4-42-4576:
உடல்தனைக் கழிக்க லுற்ற
உலகத்துள் உயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிக்க வேண்டில்
இறைவனை ஏத்து மின்னோ
கடல்தனில் நஞ்ச முண்டு
காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4-42-4577:
அள்ளலைக் கடக்க வேண்டில்
அரனையே நினைமி னீணர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட்
புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங்
காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4-42-4578:
பாதியில் உமையாள் தன்னைப்
பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி
விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ்
சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.
4-42-4579:
சாமனை வாழ்க்கை யான
சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித்
தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத்
தொன்னெறி பலவுங் காட்டுந்
தூமனத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்டா வாறே.
4-42-4580:
குண்டரே சமணர் புத்தர்
குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள்
கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
விண்டவர் புரங்கள் எய்து
விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்கள் துணையி னானைத்
துருத்திநான் கண்ட வாறே.
4-42-4581:
பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்
பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட
அடலரக் கன்றன் ஆண்மை
கண்டொத்துக் கால்வி ரலால்
ஊன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.