திருகுடந்தை கீழ்கோட்டம் ஆலய தேவாரம்
திருகுடந்தை கீழ்கோட்டம் ஆலயம்3-59-3427:
அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.
3-59-3428:
ஓத்தர வங்களோடும் ஒலிகாவிரி யார்த்தயலே
பூத்தர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்ல
கூத்தர வங்களோவாக் குழகன்குட மூக்கிடமா
ஏத்தர வங்கள்செய்ய இருந்தானவன் எம்மிறையே.
3-59-3429:
மயில்பெடை புல்கியால மணல்மேல்மட அன்னமல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங்காவிரிப் பைம்பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
இயலொடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.
3-59-3430:
மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ
அக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா
எக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே.
3-59-3431:
வடிவுடை வாட்டடங்கண் ணுமையஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட வுரிகொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங் குழகன்குட மூக்கிடமா
இடிபடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.
3-59-3432:
கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே.
3-59-3433:
மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தானெழில் வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புர மூன்றினையுங்
குலைமலி தண்பலவின் பழம்வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி இருந்தானவன் எம்மிறையே.
3-59-3434:
நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப் பருமால்வரைக் கீழடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு பழம்வீழ்குட மூக்கிடமா
இடுமணல் எக்கர்சூழ இருந்தானவன் எம்மிறையே.
3-59-3435:
ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமா
ஈரிரு கோவணத்தோ டிருந்தானவன் எம்மிறையே.
3-59-3436:
மூடிய சீவரத்தார் முதுமட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா முடையான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவன் எம்மிறையே.
3-59-3437:
வெண்கொடி மாடமோங்கு விறல்வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தனல்ல
தண்குட மூக்கமர்ந்தான் அடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே.
5-22-5444:
பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களை
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.
5-22-5445:
பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டியுறை யுங்குட மூக்கிலே.
5-22-5446:
நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி யெனப்படுங்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.
5-22-5447:
ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னுமினி தாகும் மியமுனைச்
சேதா ஏறுடை யானமர்ந் தவிடங்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.
5-22-5448:
நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.
5-22-5449:
துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவ னாய்ப்பார்த்தன் மேற்கணை தொட்டவெங்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே.
5-22-5450:
தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.
5-22-5451:
காமி யஞ்செய்து காலம் கழியாதே,
ஓமி யஞ்செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமி யோடு சரச்சுவ தியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.
5-22-5452:
சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாங்
குரவ னாருறை யுங்குட மூக்கிலே.
5-22-5453:
அன்று தானரக் கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுக் கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே.