HolyIndia.Org

திருக்கருகாவூர் ஆலய தேவாரம்

திருக்கருகாவூர் ஆலயம்
3-27-3085:
படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை 
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர் 
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல் 
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே. 

3-27-3086:
பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச் 
சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும் 
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச் 
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே. 

3-27-3087:
மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும் 
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந் 
துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை 
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே. 

3-27-3088:
நலமலி கொள்கையார் நான்மறை பாடலார் 
வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை 
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி 
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே. 

3-27-3089:
வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல் 
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர் 
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி 
சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே. 

3-27-3090:
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை 
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட 
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல் 
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே. 

3-27-3091:
பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம் 
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி 
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் 
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே. 

3-27-3092:
முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள் 
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால் 
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய 
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே. 

3-27-3093:
துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர் 
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர் 
மணிவண னவனொடு மலர்மிசை யானையுந் 
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே. 

3-27-3094:
உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள் 
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல் 
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந் 
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே. 

3-27-3095:
தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெங் 
கண்ணுத லவனடி கழுமல வளநகர் 
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல் 
பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.